விடாமுயற்சி மற்றும் தன்னம்பிக்கையால் உயர்ந்தவர் முதல்வர் விஜய்… ‘தேவா’ பட நடிகை ஸ்வாதி பாராட்டு!

முதல்வர் விஜய்யின் கடைசி திரைப்படமாக உருவான ‘ஜனநாயகன்’ நேற்று உலகம் முழுவதும் வெளியான நிலையில், பல்வேறு திரைப்பிரபலங்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வரிசையில், விஜயின் ஆரம்பகால கதாநாயகிகளில் ஒருவரான நடிகை ஸ்வாதி, மனதை நெகிழச் செய்யும் பதிவு ஒன்றை சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.

எஸ்.ஏ. சந்திரசேகர் 1995-ஆம் ஆண்டு இயக்கிய ‘தேவா’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான ஸ்வாதி, தனது முதல் படத்திலேயே விஜயுடன் நடித்தார். பின்னர் ‘வான்மதி’ படத்தில் அஜித்துடன் இணைந்து நடித்த அவர், தொடர்ந்து ‘வசந்த வாசல்’, ‘செல்வா’ உள்ளிட்ட படங்களில் மீண்டும் விஜய்யுடன் திரையை பகிர்ந்தார். தமிழ் மட்டுமின்றி கன்னடம், தெலுங்கு மொழிகளிலும் பல படங்களில் நடித்த அவர், ‘யோகி’ திரைப்படத்திற்குப் பிறகு சினிமாவிலிருந்து விலகி, தற்போது சின்னத்திரை தொடர்களில் கவனம் செலுத்தி வருகிறார்.

தனது இன்ஸ்டாகிராம் பதிவில் பழைய புகைப்படங்களை பகிர்ந்த ஸ்வாதி, விஜயுடன் கழித்த திரைப்பயண நினைவுகள் எப்போதும் தனக்கு பொக்கிஷம் என குறிப்பிட்டுள்ளார். தனது முதல் திரைப்படத்தில் அவருடன் நடித்ததில் தொடங்கி, அவரது கடைசி படமான ‘ஜனநாயகன்’ வெளியாகும் தருணம் வரை அந்த பயணத்தை பார்த்தது மிகுந்த மகிழ்ச்சியை அளிப்பதாகவும், படத்தின் வெற்றிக்காக இதயப்பூர்வமான வாழ்த்துகளை தெரிவித்தார்.

நடிகராக தொடங்கி மாநிலத்தின் முதல்வராக உயர்ந்த விஜயின் பயணம் தன்னை எப்போதும் ஊக்கப்படுத்தியதாகவும் ஸ்வாதி கூறியுள்ளார். எண்ணற்ற சவால்களைத் தாண்டி கடின உழைப்பு, விடாமுயற்சி மற்றும் தன்னம்பிக்கையால் இந்த உயரத்தை எட்டியிருப்பது பாராட்டத்தக்க சாதனை என்றும் அவர் புகழ்ந்துள்ளார். விரைவில் விஜயை நேரில் சந்தித்து வாழ்த்துச் சொல்லும் நாளை ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன் என்றும், அவரின் புதிய பொறுப்பிலும் மிகப்பெரிய வெற்றிகள் தொடர வேண்டும் என்பதே தனது மனமார்ந்த வாழ்த்து என்றும் தனது பதிவை நிறைவு செய்துள்ளார்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading