தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளிலும் பிஸியாக இருக்கும் பூஜா ஹெக்டே, தற்போது தமிழில் ‘ஜனநாயகன்’, ‘காஞ்சனா 4’ மற்றும் தெலுங்கில் துல்கர் சல்மானின் ‘ஸ்ரீ ஸ்ரீ’ உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். இதற்கிடையில், இயக்குநர் ஹாசித் கோலி இயக்கும் புதிய தெலுங்கு நகைச்சுவை திரைப்படத்திலும் அவர் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் ரவி தேஜா மற்றும் ஸ்ரீவிஷ்ணு முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.
இந்தப் படத்தில் ரவி தேஜாவுக்கு ஜோடியாக பூஜா ஹெக்டேவை ஒப்பந்தம் செய்வதற்காக சமீபத்தில் பேச்சுவார்த்தை நடைபெற்றதாக கூறப்படுகிறது. ஏற்கனவே பிரபாஸ், அல்லு அர்ஜுன் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ள அவர், ரவி தேஜாவுடன் இதுவரை எந்த திரைப்படத்திலும் இணைந்து நடித்ததில்லை. அதனால் இந்த கூட்டணி ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
‘வீராதி வீருலந்தா’ என பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தை தில் ராஜு தயாரிக்கிறார். ரவி தேஜா – பூஜா ஹெக்டே இணையும் முதல் திரைப்படமான இது, 2027-ஆம் ஆண்டு சங்கராந்தி வெளியீட்டை இலக்காகக் கொண்டு தயாராகி வருகிறது.
—
