டெல்லி: கல்வி சீர்திருத்த போராட்டம்… மாணவர்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்த வரலட்சுமி சரத்குமார்!

டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் கல்வி சீர்திருத்தத்தை வலியுறுத்தி அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் மீது நடைபெற்றதாக கூறப்படும் வன்முறை சம்பவங்களுக்கு நடிகை வரலட்சுமி சரத்குமார் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்ட பதிவு தற்போது கவனம் பெற்று வருகிறது.

அந்த பதிவில், “பல நேரங்களில் நம்முடைய அன்றாட வாழ்க்கையிலேயே முழுமையாக கவனம் செலுத்தி, சுற்றி நடக்கும் முக்கியமான விஷயங்களை மேலோட்டமாக மட்டுமே பார்க்கிறோம். சில பிரச்சினைகள் காலப்போக்கில் சரியாகிவிடும் என்ற எண்ணமும் நமக்குள் உருவாகிவிடுகிறது. ஆனால், சமீபத்தில் வெளியாகியுள்ள சில காட்சிகளை அப்படியே கடந்து செல்ல முடியவில்லை. இணையத்தில் பரவி வரும் வீடியோக்கள் மனதை மிகவும் பாதிக்கின்றன; அவற்றைப் பார்க்கும்போது அதிர்ச்சியும் வேதனையும் ஏற்படுகிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், “இப்படிப்பட்ட சம்பவங்கள் நமது சமூகம் இன்னும் எவ்வளவு பின்தங்கிய மனநிலையுடன் இருக்கிறது என்பதை வெளிப்படுத்துகின்றன. அமைதியான முறையில் தங்கள் கோரிக்கையை முன்வைப்பவர்கள் மீது வன்முறை நடத்தப்படுவது எந்த சூழலிலும் நியாயப்படுத்த முடியாது. பாதுகாப்பு அளிக்க வேண்டியவர்களே அச்சத்தை ஏற்படுத்தினால், மக்கள் யாரை நம்பிச் செல்ல முடியும்? வருங்கால தலைமுறைக்கு சிறந்த கல்வி அமைப்பு கிடைக்க வேண்டும் என்பதற்காக பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்ற ஒரே கோரிக்கையைத்தான் மாணவர்கள் முன்வைக்கிறார்கள். பலர் மௌனமாக இருக்கும் இந்த நேரத்தில், தங்களது உரிமைக்காக குரல் எழுப்பும் இந்திய இளைஞர்களுடன் நான் நிற்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

அதேக, உயிரிழப்புகள் என்பது சாதாரணமாக எடுத்துக்கொள்ளக்கூடிய விஷயம் அல்ல. தற்போது நடந்து கொண்டிருக்கும் சம்பவங்கள் எதுவும் சரியான திசையில் இல்லை. அரசியல் கருத்துகளில் வேறுபாடு இருக்கலாம்; ஆனால் சில சூழல்களில் அமைதியாக இருப்பது தீர்வாக அமையாது. அனைவரும் தங்கள் குரலை பதிவு செய்ய வேண்டிய தருணம் இது. இந்த விஷயத்தில் தாமதமாகப் பேசியதற்கு வருந்துகிறேன். இது அரசியல் சார்ந்த விவகாரம் அல்ல; மனிதாபிமானம் தொடர்பான விஷயம் என்பதை நாம் அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும்” என்று தனது பதிவில் வலியுறுத்தியுள்ளார்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading