தமிழ் சினிமாவில் தனித்துவமான கதைக்களங்களுடன் பல வெற்றிப்படங்களை வழங்கிய இயக்குநர்களில் சுசீந்திரனும் ஒருவர். ‘வெண்ணிலா கபடி குழு’, ‘நான் மகான் அல்ல’, ‘பாண்டிய நாடு’, ‘ஜீவா’ போன்ற திரைப்படங்கள் அவருக்கு தனி அடையாளத்தை உருவாக்கிக் கொடுத்தன. ஆனால், அதன்பிறகு அவர் இயக்கிய கடந்த ஒன்பது திரைப்படங்களும் எதிர்பார்த்த வெற்றியைப் பெறாமல் தொடர் தோல்வியைச் சந்தித்துள்ளன.
இந்த சூழலில், சுசீந்திரன் தனது அடுத்த படத்திற்கான பணிகளை தொடங்கியுள்ளதாகவும், அந்த படம் தொடர்பாக புதிய தகவல்கள் வெளியாகியுள்ளதாகவும் கூறப்படுகிறது. அதன்படி, நடிகர் சாந்தனு முதன்முறையாக சுசீந்திரன் இயக்கத்தில் நடிக்க உள்ளதாக திரையுலக வட்டாரங்களில் தகவல் பரவி வருகிறது.
இதனுடன், இந்த திரைப்படத்தில் இன்னொரு முக்கிய கதாநாயகனாக நடிகர் விக்ராந்தும் இடம்பெற உள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே சுசீந்திரன் இயக்கிய ‘பாண்டிய நாடு’ மற்றும் ‘நெஞ்சில் துணிவிருந்தால்’ ஆகிய படங்களில் விக்ராந்த் நடித்திருந்த நிலையில், இந்த புதிய படத்தின் மூலம் இருவரும் மீண்டும் கூட்டணி அமைக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
