கவினும் நயன்தாராவும் இணைந்து நடித்துள்ள திரைப்படம் ‘ஹாய்’. விஷ்ணு எடவன் இயக்கியுள்ள இப்படத்தின் மூலம் அவர் இயக்குநராக அறிமுகமாகியுள்ளார். லோகேஷ் கனகராஜிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய விஷ்ணு எடவன், இப்படத்தை இயக்கியுள்ளார். 7 ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் மற்றும் ரவுடி பிக்சர்ஸ் இணைந்து தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜென் மார்டின் இசையமைத்துள்ளார்.
ராதிகா சரத்குமார், பாக்யராஜ், பிரபு, பூர்ணிமா, காவ்யா அறிவுமணி, விடிவி கணேஷ் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். படத்தில் இடம்பெற்றுள்ள ‘கண்ணக்குழியா’, ‘ரசகுல்லா’, ‘பச்ச புள்ள’, ‘குடிகார நெஞ்சு’ ஆகிய பாடல்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. குறிப்பாக ஜி.வி.பிரகாஷ் குமார் பாடிய ‘கண்ணக்குழியா’ பாடல் வெளியானது முதலே ரசிகர்களின் கவனத்தை பெற்றது.
கடந்த ஆகஸ்ட் 28-ம் தேதி ‘ஹாய்’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியான நிலையில், படத்திற்கு ரசிகர்களிடையே வரவேற்பு கிடைத்து வருகிறது. இதையடுத்து சென்னை வடபழனியில் உள்ள திரையரங்கிற்கு திடீரென சென்ற நயன்தாரா, அங்கு படம் பார்க்க வந்த ரசிகர்களை நேரில் சந்தித்தார். ரசிகர்களுடன் கலந்துரையாடிய நயன்தாரா, ‘ஹாய்’ படத்திற்கு தொடர்ந்து ஆதரவு அளித்து வெற்றியை கொடுத்து வருவதற்கு நன்றி தெரிவித்தார். மேலும், “இங்கு வரும்போது ஜாலியாக உங்களுடன் பேசலாம் என்றுதான் வந்தேன். ஆனால் உங்களை எல்லாம் பார்த்ததும் ஒருமாதிரி எமோஷனலாக இருக்கிறது” என்று கூறி தனது மகிழ்ச்சியையும் நெகிழ்ச்சியையும் வெளிப்படுத்தினார்.
