இந்திய சினிமாவில் இதுவரை இல்லாத அளவிலான மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகி வரும் ராமாயணா திரைப்படத்தில் ரன்பீர் கபூர், சாய் பல்லவி, யஷ், சன்னி தியோல், ரவி துபே, ரகுல் ப்ரீத் சிங், காஜல் அகர்வால் மற்றும் குணால் கபூர் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இப்படத்தின் முதல் பாகம் 2026-ஆம் ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாக உள்ளது.
Hans Zimmer மற்றும் ஏ.ஆர். ரஹ்மான் ஆகியோர் இணைந்து இசையமைக்கும் இப்படம், இந்திய சினிமாவின் வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் சுமார் ரூ.4,000 கோடி பொருட்செலவில் உருவாக்கப்பட்டு வருகிறது.
சமீபத்தில் டெல்லியில் அமைந்துள்ள பாரத் மண்டபத்தில் ‘பிரதம் சங்கல்ப்’ என்ற பெயரில் ‘ராமாயணா’ திரைப்படத்தின் பிரம்மாண்ட அறிமுக நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த விழாவில் இப்படத்தின் பிரத்யேக காட்சிகள் மற்றும் டிரைலர் திரையிடப்பட்ட நிலையில், ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. மேலும், வரும் ஜூலை 24-ஆம் தேதி ‘ராமாயணா’ திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ டிரைலர் யூடியூப் தளத்தில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
இந்த விழாவில் இயக்குநர் நிதேஷ் திவாரி பேசியபோது, “ராமாயணம் என்பது உலகின் மிகச்சிறந்த கதைகளில் ஒன்றாகும். அந்த காவியத்தின் சிறப்பு, அது எடுத்துரைக்கும் வாழ்க்கை நெறிகளிலும், மனித மதிப்புகளிலும் உள்ளது. அதை உலகளாவிய கதையாக மாற்ற வேண்டும் என்ற அவசியம் இல்லை. ஏற்கனவே இந்த காவியம் உலகம் முழுவதும் மதிப்பும் மரியாதையும் பெற்ற ஒன்றாக உள்ளது.
நாங்கள் அமைக்கும் ஒவ்வொரு காட்சி அமைப்பும் இந்த மாபெரும் காவியத்தின் பெருமைக்கு ஏற்ற வகையில் உருவாகி வருகிறது. உலகின் சிறந்த கலைஞர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் கதை சொல்லும் திறமை கொண்டவர்களுடன் இணைந்து பணியாற்றியிருப்பது எனது வாழ்நாளில் கிடைத்த மிகப்பெரிய வாய்ப்பாக கருதுகிறேன். ராமாயணத்தின் பிரம்மாண்டமான காட்சிகளுடன், அதில் உள்ள உணர்வுகள், மனிதநேயம் மற்றும் காலத்தால் அழிக்க முடியாத ஆன்மாவையும் உலகம் முழுவதும் உள்ள பார்வையாளர்கள் உணர்வார்கள் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது” என்று கூறியுள்ளார்.
