தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களான கமல்ஹாசன் மற்றும் ரஜினிகாந்தை தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் நேரில் சந்தித்துள்ளனர். சங்கத்தின் தலைவராக இயக்குநர் சேரன் தேர்வு செய்யப்பட்டதைத் தொடர்ந்து, புதிய நிர்வாகக் குழுவினர் திரையுலகின் முக்கிய பிரபலங்களை சந்தித்து வருகின்றனர்.
கமல்ஹாசனுடனான சந்திப்பு குறித்து வெளியாகியுள்ள அறிக்கையில், திரைப்பட எழுத்தில் அவரது நீண்டகால அனுபவங்கள் குறித்து நிர்வாகிகள் கேட்டறிந்துள்ளனர். அடுத்த தலைமுறை எழுத்தாளர்களுக்கு வழிகாட்டியாக விளங்கிய முன்னோடிகளில் கமல்ஹாசனும் ஒருவர் என சங்கத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ‘மகாநதி’, ‘அன்பே சிவம்’, ‘ஹே ராம்’, ‘குணா’, ‘தேவர் மகன்’ உள்ளிட்ட படங்களில் அவரது எழுத்தின் வலிமை மற்றும் வசனங்களின் ஆழம் குறித்து நிர்வாகிகள் பாராட்டியுள்ளனர்.
சங்கத்தின் செயல்பாடுகளை சிறப்பாக முன்னெடுக்க வாழ்த்து தெரிவித்த கமல்ஹாசன், நிர்வாகிகளுடன் நேரம் ஒதுக்கி பல்வேறு விஷயங்களை பகிர்ந்துகொண்டதாகவும் சங்கம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த சந்திப்பு தங்களுக்கு மிகுந்த உற்சாகத்தை அளித்ததாகவும், நீண்ட காலம் நினைவில் நிற்கும் தருணமாக அமைந்ததாகவும் சங்க நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
அதேபோல், ரஜினிகாந்தை சந்தித்தது குறித்து வெளியான அறிக்கையில், ரஜினிகாந்த் அவர்களுடன் இன்றைய திரைப்படக் கதை ஆசிரியர்கள் எதிர்கொள்ளும் சூழ்நிலை குறித்து ஆலோசனை நடைபெற்றுள்ளது. எழுத்தாளர்களுக்கு பயனளிக்கும் வகையில் இந்த விவகாரங்களை சம்பந்தப்பட்ட அனைவருடனும் சுமூகமாக பேசி தீர்வு காண்பது தொடர்பாக ரஜினிகாந்த் சில ஆலோசனைகளை வழங்கியதாக சங்கம் தெரிவித்துள்ளது.
மேலும், ‘வள்ளி’, ‘பாபா’ உள்ளிட்ட படங்களில் கதை ஆசிரியராகவும் ரஜினிகாந்த் பணியாற்றியிருப்பதை சுட்டிக்காட்டிய சங்க நிர்வாகிகள், அவரை எழுத்தாளர்கள் சங்கத்தில் உறுப்பினராக இணையுமாறு கேட்டுக்கொண்டுள்ளனர். இந்த கோரிக்கையை ரஜினிகாந்த் உடனடியாக ஏற்றுக்கொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
