‘சென்னை 28’, ‘சரோஜா’, ‘கோவா’ உள்ளிட்ட திரைப்படங்கள் மூலம் நகைச்சுவை நடிகராக ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த வைபவ், பின்னர் ‘கப்பல்’ படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். தொடர்ந்து பிரியா பவானி சங்கருடன் நடித்த ‘மேயாத மான்’ திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று அவரது திரைப்பயணத்தில் முக்கிய இடம்பிடித்தது.
அதன்பிறகு ஷெரிப் இயக்கிய ‘ரணம் அறம் தவறேல்’ திரைப்படத்தில் நடித்த வைபவ், தனது 25-வது படத்தையும் வெற்றிகரமாக நிறைவு செய்தார். அந்தப் படமும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது.
இந்நிலையில், அறிமுக இயக்குநர் ஸ்ரீனி இயக்கத்தில் வைபவ் நடிக்கும் புதிய திரைப்படத்தின் டைட்டில் மற்றும் மோஷன் வீடியோ வெளியாகியுள்ளது. இப்படத்திற்கு ‘மாறுவேஷம்’ என பெயரிடப்பட்டுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இதில் ராம்கி, வியன்னா, ஜார்ஜ் மரியன், முனிஷ்காந்த் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள நிலையில், ராஜ்குமார் அமல் இசையமைத்துள்ளார்.
கடைசியாக வெளியான ‘பெருசு’ மற்றும் ‘சென்னை சிட்டி கேங்ஸ்டர்’ திரைப்படங்கள் எதிர்பார்த்த வெற்றியைப் பெறாத நிலையில், ‘மாறுவேஷம்’ திரைப்படம் வைபவுக்கு வெற்றிப் படமாக அமையுமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.
—
