“பிரேமம் படத்துக்குப் பிறகு உடைந்து போனேன்” – அனுபமா பரமேஸ்வரன் பகிர்ந்த வேதனை!

‘பிரேமம்’ திரைப்படத்தின் மூலம் ரசிகர்களிடம் அறிமுகமாகி பின்னர் தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் முன்னணி நடிகையாக வளர்ந்தவர் அனுபமா பரமேஸ்வரன். சினிமா உலகம் தனக்கு ஆரம்பத்தில் அறிமுகமில்லாத ஒன்றாக இருந்ததாக கூறும் அவர், ‘பிரேமம்’ படத்தில் நடித்த பிறகு எதிர்கொண்ட கேலிகள் மற்றும் சமூக வலைதள டிரோல்கள் குறித்து தற்போது மனம் திறந்து பேசியுள்ளார்.

நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்த சம்பவத்தை நினைவுகூர்ந்த அனுபமா, சினிமா தனது ஆசைகளுக்கும் கனவுகளுக்கும் அப்பாற்பட்ட ஒரு துறையாக இருந்ததால் அதில் முதலில் தனக்கு ஆர்வம் இல்லை என தெரிவித்துள்ளார். ‘பிரேமம்’ படத்திற்கான நடிகர், நடிகைகள் தேர்வு குறித்த தகவல்களை தனது தோழி அனுப்பியதைத் தொடர்ந்து, ஆர்வத்துடன் ஆடிஷனில் பங்கேற்றதாகவும், எதிர்பாராத விதமாக படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்ததாகவும் கூறியுள்ளார்.

வாய்ப்பு கிடைத்திருந்தாலும், ஆரம்பத்தில் தனது நண்பர்களிடம் கூட இதை தெரிவிக்கவில்லை என அனுபமா குறிப்பிட்டுள்ளார். தான் நடித்த கதாபாத்திரம் படத்தில் இருந்து நீக்கப்படலாம் என்ற எண்ணம் இருந்ததால், பின்னர் கூறிக்கொள்ளலாம் என நினைத்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். மூன்று கதாநாயகிகள் இடம்பெற்றிருந்ததால் தனது கதாபாத்திரத்திற்கான திரை நேரம் குறைவாக இருந்த நிலையில், அதனை வைத்து பலரும் தன்னை கேலி செய்ததாகவும் அனுபமா தெரிவித்துள்ளார்.

அந்த காலகட்டத்தில்தான் சமூக வலைதளங்களில் தனக்கு எதிரான டிரோல்கள் அதிகரித்ததாகவும், அப்போது சிறு வயதில் இருந்ததால் அந்த விமர்சனங்களை தாங்கிக்கொள்ள முடியாமல் மனதளவில் மிகவும் பாதிக்கப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார். சினிமா துறையைப் பற்றி தனது பெற்றோருக்கும் அதிகம் தெரியாததால், தனக்கு எப்படி ஆறுதல் கூறுவது என்பதுகூட அவர்களுக்கு தெரியவில்லை என்றும் அனுபமா வேதனையுடன் பகிர்ந்துள்ளார்.

இதன்பின்னர் மலையாளத்தில் நல்ல கதாபாத்திரங்கள் கிடைத்தால் தொடர்ந்து நடிக்கலாம் என நினைத்துக் கொண்டிருந்தபோது, தெலுங்கு இயக்குநர் ஸ்ரீவிக்ரம் தன்னை அணுகியதாக அனுபமா தெரிவித்துள்ளார். அதன் பிறகு தெலுங்கு திரையுலகில் கவனம் செலுத்தி, அந்த மொழியை கற்றுக்கொண்டு தனது நடிப்பின் மூலம் தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்கியதாகவும் கூறியுள்ளார். அங்கு தனக்கான பெயரை நிலைநாட்டிய பின்னரே மீண்டும் மலையாள சினிமாவுக்கு திரும்ப வேண்டும் என முடிவு செய்ததாகவும் அனுபமா பரமேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading