முதலமைச்சர் விஜய் நடிப்பில், இயக்குநர் எச்.வினோத் இயக்கியுள்ள ‘ஜன நாயகன்’ திரைப்படம் வருகிற ஜூலை 23-ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் என தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.முன்னதாக ஜனவரி 9-ஆம் தேதி வெளியாக திட்டமிடப்பட்டிருந்த இப்படம், தணிக்கை சான்றிதழ் வழங்குவதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. சுமார் ஆறு மாத பரிசீலனைக்குப் பிறகு, மத்திய திரைப்படத் தணிக்கை வாரியம் படத்திற்கு ‘ஏ’ சான்றிதழ் வழங்கியுள்ளது.
தமிழகத்தில் மட்டும் சுமார் 950 திரையரங்குகளிலும், உலகம் முழுவதும் சுமார் 3,000 திரையரங்குகளிலும் படம் வெளியாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு விஜய் நடித்த முதல் மற்றும் கடைசி திரைப்படம் என்பதால், ரசிகர்கள் மத்தியில் இப்படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
மேலும், 1977-ஆம் ஆண்டு முதலமைச்சராக பதவியேற்ற பிறகும் எம்.ஜி.ஆர் நடித்த படங்கள் வெளியான வரலாற்றை ஒப்பிட்டு, தற்போது விஜய் முதலமைச்சராக பதவியேற்ற பிறகு ‘ஜன நாயகன்’ வெளியாக இருப்பது குறிப்பிடத்தக்க நிகழ்வாக பேசப்பட்டு வருகிறது.
