மலையாள சினிமாவில் தனக்கென வலுவான இடத்தை உருவாக்கியுள்ள பார்வதி, தமிழ் திரையுலகிலும் தனது திறமையான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்தவர். கதையின் முக்கியத்துவத்தையும், கதாபாத்திரத்தின் ஆழத்தையும் முதன்மையாகக் கருதி தேர்வு செய்து நடித்து வரும் அவர், தற்போது இயக்குநராகவும் புதிய பயணத்தை தொடங்கத் தயாராகி வருகிறார்.
இது குறித்து பேசிய பார்வதி, தனது முதல் படத்தை இயக்குவதற்காக கடந்த 5 ஆண்டுகளாக காத்திருப்பதாக தெரிவித்துள்ளார். படத்திற்கான கதை மற்றும் திரைக்கதை எழுதும் பணிகள் பெரும்பாலும் நிறைவடைந்துவிட்டதாகவும், இன்னும் சில பணிகள் மட்டுமே மீதமிருப்பதாகவும் கூறியுள்ளார். தகுந்த தயாரிப்பாளர் கிடைத்தவுடன் விரைவில் படப்பிடிப்பை தொடங்க முடியும் என்ற நம்பிக்கையையும் அவர் வெளிப்படுத்தியுள்ளார்.
நடிப்பைத் தாண்டி இயக்குநர் பொறுப்பை ஏற்க விரும்புவதற்கான காரணத்தையும் பார்வதி விளக்கியுள்ளார். சினிமா தொடர்பான விஷயங்களைத் தவிர தனக்கு அதிகம் தெரியாது என்றும், நடிகையாக தனக்கு கிடைக்கும் கதாபாத்திரங்கள் சில வரம்புகளுக்குள் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஆனால் இயக்குநராக செயல்படும்போது தனது கற்பனை மற்றும் படைப்பாற்றலை இன்னும் விரிவாக வெளிப்படுத்த முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், திரைக்கதை வாசிக்கும் தனது அணுகுமுறையே தற்போது முற்றிலும் மாறிவிட்டதாக பார்வதி கூறியுள்ளார். ஒரு கதையை படிக்கும்போதே அதில் இடம்பெறும் ஒவ்வொரு காட்சியையும் எந்த விதத்தில் காட்சிப்படுத்தலாம், அதன் உணர்வை எப்படி திரையில் கொண்டு வரலாம் என்பது குறித்து சிந்திக்கத் தொடங்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். தனது இயக்குநர் கனவு விரைவில் நிறைவேற அனைவரும் பிரார்த்தனை செய்ய வேண்டும் என்றும் பார்வதி கேட்டுக்கொண்டுள்ளார்.
—
