ஆந்திர மாநில துணை முதல்வரும் நடிகருமான பவன் கல்யாணுக்கு சமீபத்தில் மும்பையில் வலது தோள்பட்டையில் அறுவை சிகிச்சை நடைபெற்றது. இரண்டு தோள்களிலும் சிகிச்சை தேவைப்படுவதால், முதற்கட்டமாக வலது தோளில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதாகவும், இடது தோளுக்கான சிகிச்சை பின்னர் மேற்கொள்ளப்படும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
அறுவை சிகிச்சைக்குப் பிறகு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பவன் கல்யாணை ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு மற்றும் மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் நேரில் சந்தித்து நலம் விசாரித்தனர்.
இந்நிலையில், மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ள பவன் கல்யாணுக்கு மருத்துவர்கள் தொடர்ந்து ஓய்வு எடுக்க அறிவுறுத்தியுள்ளனர். அடுத்த நான்கு மாதங்கள் முழுமையான ஓய்வில் இருக்க வேண்டுமென மருத்துவ ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்தக் காலத்தில் அவரது மனைவி அன்னா, அவரை உடனிருந்து கவனித்து வருகிறார்.
