ஹாலிவுட்டின் முன்னணி நடிகர்களில் ஒருவரான டாம் குரூஸ் நடிப்பில் உருவாகியுள்ள ‘டிகர்’ திரைப்படம், ஆஸ்கர் விருது பெற்ற இயக்குநர் அலெஜான்ட்ரோ இயக்கத்தில் உருவாகியுள்ளது. வார்னர் பிரதர்ஸ் நிறுவனம் வெளியிடும் இந்த திரைப்படம், வரும் அக்டோபர் 2-ஆம் தேதி இந்தியாவில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.இந்த திரைப்படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே கவனம் பெற்றுள்ளது. இந்த நிலையில், இப்படத்தில் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடிக்க நடிகர் பகத் பாசிலுக்கு முதலில் வாய்ப்பு வழங்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆனால், அந்த கதாபாத்திரத்தின் உச்சரிப்பை சரியாக கற்றுக்கொள்வதற்காக அமெரிக்காவுக்கு சென்று மூன்று முதல் நான்கு மாதங்கள் தங்கி பயிற்சி பெற வேண்டும் என தயாரிப்பு தரப்பு கேட்டுக்கொண்டதாக கூறப்படுகிறது. மேலும், அந்த பயிற்சிக்காக அமெரிக்காவில் தங்குவதற்கான செலவுகளை தயாரிப்பு நிறுவனம் ஏற்க மறுத்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து சமீபத்தில் அளித்த பேட்டியில் பகத் பாசில், அந்த பயிற்சிக்காக செலவிட வேண்டிய பணம், நேரம் மற்றும் உழைப்பு, தனக்கு வழங்கப்பட்ட கதாபாத்திரத்தின் முக்கியத்துவத்திற்கு ஏற்றதாக இல்லை என்று கருதியதால், அந்த வாய்ப்பை ஏற்காமல் விட்டுவிட்டதாக தெரிவித்துள்ளார்.
