டாம்ஸ் கன்சல்டன்சி நிறுவனத்தின் சார்பில் தமிழ்வாணன் தயாரிக்கும் புதிய திரைப்படம், ஏலகிரி மலையில் வாழும் மக்களின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு உருவாகி வருகிறது. ‘போங்கு’ திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான தாஜ் இந்தப் படத்தை இயக்குகிறார். தயாரிப்பாளர் தமிழ்வாணனே இப்படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக அபிராமி நடிக்கிறார். மேலும் சிஎஸ்கே சரவணன், பிக் பாஸ் பிரவீன், ஜெய்பீம் மொசக்குட்டி, அகத்தியன், விஜயலட்சுமி, கவுசல்யா உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தேவசூர்யா ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு ஜோன்ஸ் ரோபட் இசையமைத்துள்ளார்.
படம் குறித்து இயக்குநர் தாஜ் கூறுகையில், “மலைகளின் இளவரசி என அழைக்கப்படும் ஏலகிரி மலையில் வாழும் மக்களின் வாழ்க்கை முறை, அவர்களின் தற்போதைய சூழல் மற்றும் அவர்கள் சந்தித்த அநீதிகளை உண்மைத் தன்மையை மாற்றாமல் இந்தப் படத்தில் பதிவு செய்துள்ளோம். பொதுவுடைமை சிந்தனையின் தாக்கம் அவர்களின் வாழ்வில் எந்த அளவிற்கு உள்ளது என்பதையும், அவர்களின் குரலாக உணர்வுபூர்வமாக இந்த திரைப்படம் வெளிப்படுத்தும்.
கல்வி மற்றும் விளையாட்டு துறைகளில் திறமை இருந்தும், அதிகார வர்க்கத்தின் காரணமாக அவர்களுக்குக் கிடைக்க வேண்டிய அங்கீகாரமும் அடையாளமும் எவ்வாறு மறுக்கப்படுகிறது என்பதையும் படம் பேசுகிறது. அனைத்து தடைகளையும் கடந்து அவர்கள் சாதித்த பிறகும், அவர்களின் வாழ்க்கை எந்த அளவிற்கு மாறியுள்ளது என்பதையும் இந்த திரைப்படம் பதிவு செய்கிறது. வேற்றுமையில் ஒற்றுமை எனப் பேசப்படும் இந்த நாட்டில் இன்னும் மறைந்து கிடக்கும் ஒடுக்குமுறையை எந்த மறைப்பும் இன்றி திரையில் வெளிப்படுத்துவதே இந்தப் படத்தின் நோக்கம்” என்றார்.
—
