பாரி இளவழகன் இயக்கி, கதாநாயகனாக நடித்துள்ள ‘அன்பே டயானா’ திரைப்படம் வரும் ஜூலை 17-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதையொட்டி நடைபெற்ற படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் பேசிய இயக்குநர் பாரி இளவழகன், தனது திரைப்பயணம், படக்குழுவினரின் பங்களிப்பு மற்றும் ரசிகர்களின் ஆதரவு குறித்து மனம் திறந்து பேசினார்.
அவர் பேசியதாவது: “இந்த மேடை பார்க்க சிறியதாக இருக்கலாம். ஆனால், என்னைப் போன்ற ஒருவருக்கு இது மிகவும் பெரிய மேடை. முதலில் தமிழ் ரசிகர்களுக்கு என் மனமார்ந்த நன்றியை தெரிவிக்க விரும்புகிறேன். ‘ஜமா’ திரைப்படம் திரையரங்குகளில் பெரிய அளவில் கவனம் பெறவில்லை என்றாலும், ஓடிடியில் பார்த்து அந்தப் படத்தை கொண்டாடினீர்கள். அதுமட்டுமல்லாமல், ‘அன்பே டயானா’ படத்தை தவறவிடமாட்டோம் என்று நீங்கள் கூறியிருப்பது எனக்கு மிகப்பெரிய உற்சாகத்தை அளிக்கிறது.இளையராஜா சாருக்கும் என் நன்றிகள். ‘அன்பே டயானா’ திரைப்படத்திலும் அவருடைய பங்களிப்பு இருக்க வேண்டும் என்பதற்காகவே அவரது பாடலை பயன்படுத்தியுள்ளோம்.
யுவராஜ், நரேன் சார் மற்றும் மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் குழுவினருக்கு மனமார்ந்த நன்றி. இந்தக் கதையை முழுமையாக நம்பி, நான் நினைத்தபடி உருவாக்குவதற்கு அவர்கள் எனக்கு முழு சுதந்திரம் வழங்கினர். உதவி இயக்குநராக இருந்த காலம் முதல் என்னுடன் பயணித்த அனைவருக்கும் இந்த நேரத்தில் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். ஒளிப்பதிவாளர் ஷெல்லிக்கும் என் நன்றி. மணிரத்னம் சாரின் பள்ளியில் அவர் பெற்ற அனுபவமும், என்னுடன் பணியாற்றிய உதவி இயக்குநர்கள் மற்றும் தொழில்நுட்பக் குழுவினரின் ஒத்துழைப்பும் இந்தப் படம் சிறப்பாக உருவாக முக்கிய காரணமாக அமைந்தது.
என் அண்ணன் பாபா மணிக்கும் நன்றி. அவரின் மூலமாகத்தான் ‘பெங்களூரு பாபா’ கதாபாத்திரம் உருவானது. படப்பிடிப்புத் தளத்தில் அனைவரும் தங்களுடைய முழு அர்ப்பணிப்புடன் உழைத்தனர். இந்தப் படத்தில் பணியாற்றிய நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவரும் மிகுந்த திறமையாளர்கள். அவர்களின் பங்களிப்பால்தான் ‘அன்பே டயானா’ இன்று இந்த வடிவத்தை அடைந்துள்ளது. ஒரு திரைப்படம் ஒரே ஒருவரால் உருவாகாது. அதில் உழைத்த ஒவ்வொருவரின் பங்களிப்பும் சம அளவில் முக்கியமானது.
‘ஜமா’ படத்திற்குப் பிறகு இந்தக் கதையை பலரிடம் கூறியபோது, ‘நீங்கள் இயக்கம் மட்டும் செய்யுங்கள்’ என்றுதான் பலரும் ஆலோசனை கூறினார்கள். அப்போது யுவராஜ் ப்ரோவை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. கதையை முழுமையாகக் கேட்டவுடன், ‘இந்தப் படத்தில் நீங்கள்தான் ஹீரோ’ என்று அவர் கூறினார். சேத்தன் சாருக்கு என்னுடைய சிறப்பு நன்றி. இந்தக் கதாபாத்திரத்தை அவர் ஏற்றுக்கொண்டது படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்தது. அவருடன் பணியாற்றியது மறக்க முடியாத அனுபவம். போஸ்டர் வெளியான நாளிலிருந்தே அனைவரது கவனத்தையும் ஈர்த்தவர் ரோஜா மேடம். அந்த அம்மா கதாபாத்திரத்திற்கு அவரைத் தவிர வேறு யாரையும் என்னால் நினைத்துப் பார்க்க முடியவில்லை. இந்தப் படத்திற்கு அவர் வழங்கிய பங்களிப்பு மிகவும் முக்கியமானது. அதைவிட, அவர் மிகவும் அன்பான மனிதர்.
என்னுடைய அன்பு சகோதரர் பரிதாபங்கள் கோபிக்கும் மனமார்ந்த நன்றி. இந்தப் படத்தில் ‘பெங்களூரு பாபா’ கதாபாத்திரத்தில் அவர் அசத்தியிருக்கிறார். அந்தக் கதாபாத்திரத்தை அனைவரும் நிச்சயமாக ரசிப்பார்கள். படத்திற்கு அவர் அளித்த ஆதரவும் ஒத்துழைப்பும் அளவிட முடியாதது. படப்பிடிப்பு முழுவதும் குடும்ப உறுப்பினர் போலவே எங்களுடன் இருந்தார். அவரது கதாபாத்திரம் ரசிகர்களிடம் பெரிய அளவில் பேசப்படும்.
சுதர்சன் காந்தி மற்றும் இந்தப் படத்தில் நடித்த அனைத்து நடிகர்களுக்கும், தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள். இந்த மேடையில் அனைவரும் என்னைப் பற்றி நிறைய நல்ல விஷயங்களைப் பேசியிருக்கிறார்கள். அதற்கு தகுதியானவனாக தொடர்ந்து உழைக்க வேண்டும் என்பதே என்னுடைய எண்ணம். நீங்கள் அளித்த இந்த அன்புக்கும், நம்பிக்கைக்கும் என் இதயப்பூர்வமான நன்றிகள்” என்று பாரி இளவழகன் தெரிவித்தார்.
