‘மண்டாடி’ படத்தின் முதல் பாடல் எப்போது?… போஸ்டருடன் அறிவித்த படக்குழு!

‘வெண்ணிலா கபடிக்குழு’ திரைப்படத்தின் மூலம் காமெடி நடிகராக ரசிகர்களின் மனதில் இடம்பிடித்த சூரி, ‘ஜில்லா’, ‘வேதாளம்’, ‘அண்ணாத்தே’ உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களின் படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். பின்னர் வெற்றிமாறன் இயக்கிய ‘விடுதலை’ திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமான அவர், தொடர்ந்து ‘கருடன்’, ‘கொட்டுக்காளி’, ‘மாமன்’ உள்ளிட்ட படங்களில் நாயகனாக நடித்தார். இந்த திரைப்படங்கள் அனைத்தும் வணிக ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றதுடன், குறிப்பாக ‘கருடன்’ மற்றும் ‘மாமன்’ திரைப்படங்கள் வசூலிலும் வெற்றி கண்டன. காமெடி நடிகராக தனது பயணத்தை தொடங்கிய சூரி, தற்போது தமிழ் சினிமாவின் முக்கிய கதாநாயகர்களில் ஒருவராக உயர்ந்துள்ளார்.

அவரது நடிப்பில் உருவாகி வரும் ‘மண்டாடி’ திரைப்படத்தை மதிமாறன் புகழேந்தி இயக்கியுள்ளார். மீனவர்களின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு, மிகப்பெரிய பொருட்செலவில் உருவாகும் இப்படத்தை எல்ரட் குமார் தனது ஆர்.எஸ். இன்போ நிறுவனத்தின் சார்பில் தயாரித்துள்ளார். இதில் மகிமா நம்பியார் கதாநாயகியாக நடித்துள்ள நிலையில், ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார். மேலும், தெலுங்கு நடிகர் சுஹால், சத்யராஜ், ரவீந்திரா விஜய், அச்யுத் குமார், சாச்சனா நமிதாஸ் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

படகுப் பந்தயத்தை மையமாகக் கொண்டு தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் உருவாகி வரும் ‘மண்டாடி’ திரைப்படம் சுமார் ரூ.75 கோடி செலவில் தயாராகி வருகிறது. சூரியின் திரைப்பயணத்தில் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகும் முதல் திரைப்படம் இதுவாகும் என தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.

சமீபத்தில், கடலோரப் பகுதிகளில் நடைபெற்ற சவாலான படப்பிடிப்பு காட்சிகளின் மேக்கிங் வீடியோவை வெளியிட்டு, ‘மண்டாடி’ திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக படக்குழு அறிவித்திருந்தது. அதனைத் தொடர்ந்து, படம் வரும் செப்டம்பர் 10-ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் என்றும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.இந்த நிலையில், ‘மண்டாடி’ திரைப்படத்தின் முதல் பாடல் வரும் ஜூலை 17-ஆம் தேதி வெளியாகும் என புதிய போஸ்டரை வெளியிட்டு படக்குழு அறிவித்துள்ளது. பாடல் அறிவிப்பு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில், செப்டம்பர் 10-ஆம் தேதி வெளியாக உள்ள இந்த திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பும் மேலும் அதிகரித்துள்ளது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading