இளம் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற ஹிப்ஹாப் தமிழா ஆதியின் ‘மீசைய முறுக்கு’ திரைப்படத்தின் இரண்டாம் பாகம் தொடர்பான புதிய தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன. கடந்த 2017-ஆம் ஆண்டு வெளியாகி பிளாக்பஸ்டர் வெற்றியைப் பெற்ற ‘மீசைய முறுக்கு’ திரைப்படத்தின் மூலம் ஹிப்ஹாப் தமிழா ஆதி இயக்குநராகவும், நடிகராகவும் தமிழ் சினிமாவில் தனது பயணத்தை தொடங்கினார். தற்போது, கிட்டத்தட்ட ஒரு தசாப்தத்திற்குப் பிறகு, அந்த படத்தின் தொடர்ச்சியாக ‘மீசைய முறுக்கு 2’ உருவாகி வருகிறது.நம்பகமான சினிமா வட்டாரங்கள் தெரிவிப்பதன்படி, இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இன்னும் இரண்டு நாட்கள் மட்டுமே படப்பிடிப்பு எஞ்சியுள்ள நிலையில், முழு படப்பிடிப்பும் விரைவில் நிறைவடைய உள்ளது.
படத்தின் தயாரிப்பு நிறுவனம் இதுவரை எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிடாத நிலையில், ‘மீசைய முறுக்கு 2’ திரைப்படத்தை வரும் செப்டம்பர் மாதத்தில் திரையரங்குகளில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏற்கனவே வெளியான இப்படத்தின் டைட்டில் டீசர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றதுடன், படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் அதிகரித்தது.
1980-களையும் தற்போதைய காலகட்டத்தையும் மையமாகக் கொண்டு நகரும் வகையில் இப்படத்தின் திரைக்கதை வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும், இப்படத்தில் ஹிப்ஹாப் தமிழா ஆதி இரட்டை வேடங்களில் நடித்துள்ளார். குறிப்பாக, இந்திய பாரம்பரிய இசை குறித்த பழமைவாதக் கருத்துக்களுக்கு சவால் விடுக்கும் இளம் இசைக் கலைஞராக அவர் ஒரு கதாபாத்திரத்தில் தோன்றவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
முதல் பாகத்தைப் போலவே, இந்தப் படத்திற்கும் கதை, திரைக்கதை, வசனம், இயக்கம், இசை மற்றும் பாடல்கள் அனைத்தையும் ஹிப்ஹாப் தமிழா ஆதியே கவனித்துள்ளார். சைத்ரா ஜே ஆச்சார், ரம்யா ரங்கநாதன், கெத்திகா சர்மா ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ள நிலையில், நாசர், ஆடுகளம் நரேன், கருணாஸ், ஷா ரா, ஹர்ஷத் கான் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தின் ‘பப்பாளி பழமே’ மற்றும் ‘ஆரா 10/10’ ஆகிய பாடல்கள் ஏற்கனவே வெளியாகி இணையத்தில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றன. படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்த பிறகு, படத்தின் வெளியீட்டு தேதி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
