மலையாள திரையுலகின் முன்னணி நடிகையான பாவனா, 2006-ஆம் ஆண்டு மிஷ்கின் இயக்கத்தில் வெளியான ‘சித்திரம் பேசுதடி’ திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். அதன்பிறகு ‘வெயில்’, ‘தீபாவளி’, ‘வாழ்த்துகள்’, ‘கூடல் நகர்’, ‘ஜெயம் கொண்டான்’, ‘அசல்’ உள்ளிட்ட பல தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார். மலையாள சினிமாவிலும் ஏராளமான வெற்றிப்படங்களில் நடித்த அவர், முன்னணி நடிகையாக திகழ்ந்து வருகிறார். கடந்த 2018-ஆம் ஆண்டு தொழிலதிபர் நவீனை திருமணம் செய்து கொண்ட அவர், திருமணத்திற்குப் பிறகும் தொடர்ந்து திரைப்படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.
தமிழ், மலையாளம் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் பிரபல நடிகையாக இருக்கும் பாவனா, ஒரு திரைப்படத்தின் படப்பிடிப்பின்போது தனக்கு ஏற்பட்ட சுவாரஸ்யமான அனுபவத்தை சமீபத்திய பேட்டியில் பகிர்ந்துள்ளார். அவர் கூறியதாவது: “நானும் ஜெயராமும் இணைந்து நடித்த ‘ஹேப்பி ஹஸ்பண்ட்ஸ்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு தாய்லாந்தில் நடைபெற்றது. அந்த படத்தில் ஜெயராமுடன் நடித்தது மிகவும் மகிழ்ச்சியான அனுபவமாக இருந்தது. சிறந்த நகைச்சுவை உணர்வு கொண்ட நடிகர்களில் ஜெயராமும் ஒருவர். நடந்துகொண்டிருந்தபோது கிடைத்த ஓய்வு நேரத்தில், நகைச்சுவைக்காக பிச்சை எடுக்கலாம் என்று முடிவு செய்தோம். ஒரு இடத்தில் இருவரும் தரையில் அமர்ந்து, கண்ணில் பட்ட ஒரு பொருளை இசைக்கருவிபோல் பயன்படுத்தி, ‘நாம் பிறந்தநாள் முதல்…’ போன்ற பாடல்களை பாட ஆரம்பித்தோம்.
ஆரம்பத்தில் அந்த பாடல் யாரையும் பெரிதாக ஈர்க்கவில்லை. சிறிது நேரம் கழித்து நான் நடனமாடினேன், ஜெயராம் பாடினார். பின்னர் ஜெயராம் நடனமாட, நான் பாடினேன். இவ்வாறு மாறிமாறி செய்து கொண்டிருந்தபோது, அந்த வழியாக சென்றவர்கள் எங்கள் முன் பணத்தை வைத்து சென்றனர்.
அந்த நேரத்தில் படப்பிடிப்புக்கான ஷாட் தயாராகிவிட்டதாக அழைப்பு வந்தது. எங்களால் மொத்தமாக 100 ரூபாய் மட்டுமே சம்பாதிக்க முடிந்தது. அந்த பணத்தை அனைவரிடமும் காட்டி, ‘இது எங்கள் கடின உழைப்பால் சம்பாதித்த பணம்’ என்று பெருமையாக கூறினோம். நாங்கள் தரையில் அமர்ந்து பிச்சை எடுத்துக் கொண்டிருந்த காட்சிகளை வீடியோவாக பதிவு செய்து, பின்னர் அந்த திரைப்படத்தின் இறுதிக்காட்சியிலும் இணைத்தனர்” என்று பாவனா சிரிப்புடன் பகிர்ந்தார்.பாவனா பகிர்ந்த இந்த நகைச்சுவையான அனுபவம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி ரசிகர்களின் கவனத்தை பெற்று வருகிறது.
