மலையாள நடிகர் பிரித்விராஜ், ஆக்ஷன், குடும்பம், திரில்லர் என அனைத்து வகையான கதைகளிலும் நடித்து தனக்கென தனி இடத்தைப் பிடித்தவர். சமீபத்தில் அவரது நடிப்பில் வெளியான ‘ஐ நோ படி’ திரைப்படம் ரசிகர்களிடையே கவனம் பெற்றுள்ளது. குறிப்பாக, படத்தில் அரை மணி நேரத்திற்கும் மேலாக தொடர்ச்சியாக இடம்பெறும் சண்டைக் காட்சிகளும், கிளைமாக்ஸ் ஆக்ஷன் காட்சியும் பாராட்டுகளை பெற்று வருகின்றன.
ஆனால், கடந்த 2023-ஆம் ஆண்டு ஒரு படத்தின் சண்டைக் காட்சி படப்பிடிப்பின் போது பிரித்விராஜ் கடுமையான விபத்தில் சிக்கினார். அந்த விபத்தில் அவரது இடது முழங்காலில் தீவிர காயம் ஏற்பட்டதால், மூன்று அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டன. தற்போது அவரது இடது காலில் மூன்று டைட்டானியம் ஸ்குருக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
இதுகுறித்து பேசிய பிரித்விராஜ், ஆக்ஷன் காட்சிகளில் நடிப்பது தனக்கு மிகவும் பிடித்திருந்தாலும், எதிர்பாராத விபத்துகள் ஏற்பட்டால் படப்பிடிப்பு தடைபட்டு தயாரிப்பாளர்களுக்கு பெரும் இழப்பு ஏற்படும் என்பதால், தற்போது சண்டைக் காட்சிகளில் மிகவும் கவனமாக நடித்து வருவதாக தெரிவித்துள்ளார்.
இருப்பினும், ‘ஐ நோ படி’ திரைப்படத்தைப் பார்க்கும்போது, அறுவை சிகிச்சைக்குப் பிறகும் எந்த தயக்கமும் இல்லாமல் பிரித்விராஜ் பல ஆபத்தான ஆக்ஷன் காட்சிகளில் ரிஸ்க் எடுத்து நடித்திருப்பது தெளிவாக தெரிகிறது. அவரது அர்ப்பணிப்பும் துணிச்சலும் ரசிகர்களிடையே பாராட்டைப் பெற்று வருகிறது.
