சமீபத்தில் வெளியான ‘கட்டா குஸ்தி 2’ திரைப்படத்தில் ‘மீனு மிஸ்’ கதாபாத்திரத்தில் நடித்த மோக்ஷா தற்போது ரசிகர்களிடையே அதிகம் பேசப்படும் நடிகையாக மாறியுள்ளார். படத்தில் அவரது கிளாமர் மற்றும் காமெடி கலந்த கதாபாத்திரம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. நாயகிக்கான தோற்றம் இருந்தும் இதுபோன்ற கதாபாத்திரத்தை ஏன் தேர்வு செய்தார் என்றும் சிலர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
மோக்ஷாவுக்கு இது முதல் தமிழ் திரைப்படம் அல்ல. ஏற்கனவே ஒரு தமிழ் படத்தில் நடித்திருந்தாலும், அந்தப் படம் கைவிடப்பட்டது. கொல்கத்தாவைச் சேர்ந்த மோக்ஷா, பெங்காலி திரைப்படங்களில் நடித்து வந்ததுடன், சில தெலுங்கு மற்றும் மலையாள படங்களிலும் நடித்துள்ளார். தற்போது ‘கட்டா குஸ்தி 2’ மூலம் தமிழ் ரசிகர்களிடையே பிரபலமாகியுள்ளார்.
படத்தின் வெற்றி குறித்து பேசிய மோக்ஷா, “’கட்டா குஸ்தி 2′ இவ்வளவு பெரிய வெற்றிப் படமாக மாறும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. தமிழ் சினிமா ரசிகர்கள் என் மீது இவ்வளவு அன்பைப் பொழிவார்கள் என்றும் நினைக்கவில்லை. ஒரே இரவில் மோக்ஷாவாக இருந்த என்னை ‘மீனு மிஸ்’ கதாபாத்திரமாக மாற்றி, இந்த அளவிற்கு பிரபலமாக்கியது இன்னும் என் கற்பனைக்கும் சிந்தனைக்கும் எட்டாத ஒன்றாக உள்ளது” என தெரிவித்துள்ளார். மேலும், விஷ்ணு விஷால் தன்னிடம் இந்தப் படத்தில் நடிக்குமாறும், அதன்பிறகு என்ன நடக்கிறது என்பதை பார்க்குமாறும் நம்பிக்கை அளித்ததாக மோக்ஷா கூறினார். அவரது வார்த்தைகளை முழுமையாக நம்பியதால், வேறு எந்த தமிழ் படங்களிலும் ஒப்பந்தமாகாமல் ‘மீனு மிஸ்’ கதாபாத்திரத்திற்காக காத்திருந்ததாக தெரிவித்தார்.
இந்தியாவின் மிகப்பெரிய சினிமா துறைகளில் ஒன்றான தமிழ் திரையுலகில் நுழைவது எளிதான விஷயம் அல்ல என குறிப்பிட்ட மோக்ஷா, முன்னணி நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களுடன் இணைந்து பணியாற்றியதை ஆசீர்வாதமாக கருதுவதாக கூறினார். தமிழ் ரசிகர்கள் வழங்கிய அன்புக்கும் ஆதரவுக்கும் என்றும் கடமைப்பட்டிருப்பதாக தெரிவித்த அவர், படத்தில் மலையாளி கதாபாத்திரத்தில் நடித்துள்ளதால் கேரள மக்களுக்கும் தனது அன்பை தெரிவித்தார். தமிழ் சினிமா ஊடகங்கள் மற்றும் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த மோக்ஷா, தொடர்ந்து பல நல்ல திரைப்படங்களில் நடிக்க ஆவலுடன் காத்திருப்பதாக கூறியுள்ளார்.
