உலகம் முழுவதும் ரசிகர்களின் அமோக வரவேற்பைப் பெற்ற அறிவியல் புனைவு திரைப்படமான ‘டியூன்’, தனது முதல் இரண்டு பாகங்களின் வெற்றிக்குப் பிறகு தற்போது மூன்றாம் பாகத்துடன் திரும்பி வருகிறது. இதன் டிரெய்லர் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஒரு சக்திவாய்ந்த அரச குடும்பத்தின் இளவரசன் சதியால் அனைத்தையும் இழந்து பாலைவனத்தில் தஞ்சம் புகுகிறார். பின்னர் அங்குள்ள பழங்குடியினரின் தலைவராக உருவெடுத்து, தனது எதிரிகளை வீழ்த்தி மீண்டும் பேரரசனாக உயர்வதே முதல் இரண்டு பாகங்களின் கதை. 1965-ஆம் ஆண்டு வெளியான ஃபிராங்க் ஹெர்பர்டின் ‘Dune’ நாவலை அடிப்படையாகக் கொண்டு இந்த திரைப்படத் தொடர் உருவாக்கப்பட்டுள்ளது.
டியூன் திரைப்படங்களில் டிமோதி ஷலமேட் கதாநாயகனாகவும், ஸெண்டாயா கதாநாயகியாகவும் நடித்துள்ளனர். 2021-ஆம் ஆண்டு வெளியான முதல் பாகம் 6 ஆஸ்கர் விருதுகளையும், 2024-ஆம் ஆண்டு வெளியான இரண்டாம் பாகம் 2 ஆஸ்கர் விருதுகளையும் வென்றது. தற்போது வெளியாகியுள்ள மூன்றாம் பாகத்தின் டிரெய்லர், பேரரசனாக உயர்ந்த நாயகனின் வீழ்ச்சியை மையமாகக் கொண்ட கதையை வெளிப்படுத்துகிறது. ‘டியூன் 3’ திரைப்படம் வருகிற டிசம்பர் 18-ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
—
