எச். வினோத் இயக்கத்தில் விஜய், பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ உள்ளிட்டோர் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் முதலில் ஜனவரி 9-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், தணிக்கைச் சான்றிதழ் வழங்குவதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக படத்தின் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டது. இதையடுத்து தயாரிப்பு நிறுவனம் நீதிமன்றத்தையும் நாடியதால், படத்தின் ரிலீஸ் மேலும் தாமதமானது.
விஜயின் கடைசி திரைப்படமாக அறிவிக்கப்பட்டுள்ள இந்தப் படத்திற்கு, தேர்தலுக்கு முன்பே தணிக்கைச் சான்றிதழ் பெற படக்குழு முயற்சி செய்திருந்தது. ஆனால், சில ஆட்சேபனைக் காட்சிகள் இருப்பதாக கூறி தணிக்கை வாரியம் சான்றிதழ் வழங்காமல் இருந்தது. தேர்தல் முடிந்து, விஜய் முதல்வராக பதவியேற்ற பிறகும் சான்றிதழுக்காக காத்திருந்த நிலையில், இன்று (ஜூலை 9) படத்திற்கு அதிகாரப்பூர்வமாக தணிக்கைச் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.
தணிக்கை வாரியம் ‘ஜனநாயகன்’ திரைப்படத்திற்கு ‘ஏ’ (A) சான்றிதழ் வழங்கியுள்ளது. மேலும், படத்தின் மொத்த நீளம் 183 நிமிடங்கள் (3 மணி நேரம் 3 நிமிடங்கள்) என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் தணிக்கை வாரியத்தின் உத்தரவின்படி மொத்தமாக 12 மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. தற்போது தணிக்கைச் சான்றிதழ் கிடைத்துள்ளதால், ஜூலை 24-ஆம் தேதி படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கான அதிகாரப்பூர்வ வெளியீட்டு தேதி விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
