சுப்ரமணியம் சிவா இயக்கிய ‘யோகி’ திரைப்படத்தின் மூலம் சிறிய கதாபாத்திரத்தில் அறிமுகமான பாபு, அதன்பிறகு யோகி பாபு என்ற பெயரில் தமிழ் சினிமாவின் முன்னணி நகைச்சுவை நடிகராக உயர்ந்தார். பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ள அவர், பாலிவுட்டிலும் ஷாருக்கானுடன் இணைந்து நடித்துள்ளார். தற்போது அவரது 300-வது திரைப்படமான ‘அர்ஜூனன் பேர் பத்து’ வருகிற ஜூலை 17-ஆம் தேதி வெளியாக உள்ளது. வாகனத் திருட்டு, மோசடி மற்றும் சாதாரண மக்களின் வாழ்க்கையை மையமாகக் கொண்ட இப்படத்தை ரா. ராஜ்மோகன் இயக்கியுள்ளார்.
சென்னையில் நடைபெற்ற படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய யோகி பாபு, “நான் எப்போதும் காமெடியன்தான். யாருடன் நடித்தாலும் அந்தக் காட்சியில் என்னால் என்ன காமெடி செய்ய முடியும் என்பதைத்தான் முதலில் யோசிப்பேன். நயன்தாரா உள்ளிட்ட பல ஹீரோக்கள், ஹீரோயின்களுடன் நடித்துவிட்டேன். ஆனால் இன்னும் கமல்ஹாசன் சாருடன் நடிக்கவில்லை, நடிக்க ஆசை உள்ளது. கடவுளின் அருளும், முருகனின் ஆசீர்வாதமும் தான் என்னை இந்த இடத்திற்கு கொண்டு வந்துள்ளது. அவர் அருளால் 3 ஆயிரம் படங்களில் கூட நடிக்கலாம்” என்றார்.
மேலும், “கதாநாயகனாக நடித்தாலும், நான் எப்போதும் காமெடியன்தான். ரசிகர்களின் அன்புக்கு என்றும் நன்றி. சில ஆண்டுகளுக்கு முன்பு இந்தக் கதையை இயக்குநர் கூறினார். பின்னர் அவரை தொடர்புகொள்ள முடியவில்லை. ஒருநாள் அவருக்கு நானே அழைத்தபோது, கார் டிரைவராக வேலை செய்து வருவதாக கூறினார். அவரை மீண்டும் அழைத்து, கதையை மேம்படுத்தி இந்தப் படத்தில் நடித்தேன். பல உதவி இயக்குநர்களை இயக்குநர்களாக உருவாக்க நான் தயாராக இருக்கிறேன். என்னால் முடிந்த உதவிகளை தொடர்ந்து செய்வேன்” என்று நெகிழ்ச்சியுடன் பேசினார். இந்த நிகழ்ச்சியில் அவரை முதன்முதலாக நடிகராக அறிமுகப்படுத்திய இயக்குநர் சுப்ரமணியம் சிவாவும் கலந்து கொண்டு வாழ்த்தினார்.
