மறைந்த நடிகர் முரளியின் மகனான அதர்வா, தமிழ் சினிமாவில் தனக்கென தனி இடத்தைப் பிடித்த நடிகர்களில் ஒருவராக உள்ளார். ‘பாணா காத்தாடி’ மூலம் கதாநாயகனாக அறிமுகமான அவர், ‘பரதேசி’, ‘சண்டிவீரன்’, ‘இமைக்கா நொடிகள்’ உள்ளிட்ட படங்களில் வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.
தற்போது அதர்வா நடித்துள்ள ‘இதயம் முரளி’ திரைப்படம் வருகிற ஜூலை 10-ஆம் தேதி வெளியாக உள்ளது. கயாடு லோஹர் மற்றும் பிரீத்தி முகுந்தன் கதாநாயகிகளாக நடித்துள்ள இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ள நிலையில், தனது உடற்தகுதியை பராமரிக்கும் உணவுப் பழக்கம் குறித்து அதர்வா சமீபத்தில் மனம் திறந்து பேசியுள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர், “நான் என்னுடைய உணவுப் பழக்கத்தை அடிக்கடி மாற்றுவதில்லை. பெரும்பாலும் தினமும் ஒரே மாதிரியான உணவையே சாப்பிடுவேன். முன்பு காலை உணவாக முட்டை சாப்பிட்டேன். இப்போது பழைய சாதத்தை சாப்பிடுகிறேன். மதிய நேரத்தில் சிக்கன் மற்றும் காய்கறிகளை எடுத்துக்கொள்வேன். இரவு 7 மணிக்குள் சாப்பிட்டு முடித்துவிடுவேன். காலை, மதியம் டயட் உணவாக இருந்தாலும், இரவு மட்டும் தோசை சாப்பிடுவது எனக்கு மிகவும் பிடிக்கும்,” என்று தெரிவித்துள்ளார். அதர்வாவின் இந்த எளிமையான உணவுப் பழக்கம் தற்போது ரசிகர்களிடையே பேசுபொருளாக மாறியுள்ளது.
—
