‘தி இந்தியா ஸ்டோரி’ என்னை முழுமையாக மாற்றிவிட்டது… நடிகை காஜல் அகர்வால் டாக்!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான காஜல் அகர்வால், திருமணத்திற்குப் பிறகு கதைக்கு முக்கியத்துவம் உள்ள படங்களைத் தேர்வு செய்து நடித்து வருகிறார். தற்போது அவர் நடித்துள்ள ‘தி இந்தியா ஸ்டோரி’ திரைப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. சாகர் பி. ஷிண்டே தயாரிப்பில், டி.கே. சேட்டன் இயக்கியுள்ள இப்படத்தில், பாலிவுட் நடிகர் ஷ்ரேயாஸ் தல்படேவுடன் காஜல் அகர்வால் முதன்முறையாக இணைந்து நடித்துள்ளார். ஜீ ஸ்டூடியோஸ் வெளியிடும் இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் ஜூலை 24-ஆம் தேதி வெளியாகிறது.

விவசாயத்தில் பூச்சிக்கொல்லி மருந்துகள் மற்றும் ரசாயன உரங்களின் தவறான பயன்பாடு, உணவு கலப்படம் மற்றும் அதனுடன் தொடர்புடைய ஊழல் ஆகிய சமூகப் பிரச்சினைகளை மையமாகக் கொண்டு இப்படம் உருவாகியுள்ளது. ஒரு குடும்பத்தின் கதையை மட்டுமல்லாமல், பொதுமக்களின் உடல்நலம் மற்றும் உணவுப் பாதுகாப்பை பாதிக்கும் முக்கிய அம்சங்களையும் படம் பேசுகிறது. இதுபோன்ற பிரச்சினைகளை கட்டுப்படுத்த கடுமையான சட்டங்களும், விழிப்புணர்வும் அவசியம் என்பதை வலியுறுத்தும் வகையில் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய பேட்டியில் பேசிய காஜல் அகர்வால், “‘தி இந்தியா ஸ்டோரி’ திரைப்படம் என் வாழ்க்கை முறையையே மாற்றிவிட்டது. படத்திற்காக இயக்குநர் பகிர்ந்த ஆய்வுகள் மற்றும் தகவல்களைப் படித்த பிறகு, உணவு கலப்படம், பூச்சிக்கொல்லி மருந்துகள், ரசாயன உரங்கள் குறித்து எனது பார்வை மாறியது. தற்போது என் குடும்பத்திற்காக வாங்கும் உணவுப் பொருட்களை மிகவும் கவனமாகத் தேர்வு செய்கிறேன். ‘இயற்கை’ என்ற பெயரில் விற்கப்படும் அனைத்துப் பொருட்களும் உண்மையிலேயே இயற்கையானவையா என்ற கேள்வி எழுகிறது. இந்த விவகாரம் குறித்து சமூகத்தில் திறந்த உரையாடல் அவசியம். அதே நேரத்தில் விவசாயிகளுக்கு அரசும் தேவையான ஆதரவை வழங்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading