தமிழ் சினிமாவின் முன்னணி ஒளிப்பதிவாளரும் இயக்குநருமான செழியன் (57) இன்று (ஜூலை 10) உடல்நலக் குறைவு காரணமாக காலமானார். அவரது மறைவு தமிழ் திரையுலகினரிடையே பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த செழியன், ஒளிப்பதிவாளர் பி.சி. ஸ்ரீராமிடம் உதவியாளராக தனது திரைப்பயணத்தைத் தொடங்கினார். பின்னர் ‘கல்லூரி’ திரைப்படம் மூலம் ஒளிப்பதிவாளராக அறிமுகமான அவர், ‘பரதேசி’, ‘தாரை தப்பட்டை’, ‘தென்மேற்கு பருவக்காற்று’, ‘ஜோக்கர்’, ‘ரெட்டை சுழி’ உள்ளிட்ட பல முக்கிய திரைப்படங்களுக்கு ஒளிப்பதிவு செய்து தனித்துவமான இடத்தைப் பெற்றார்.
‘டூலெட்’ திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான செழியன், அந்தப் படத்திற்காக தேசிய விருதையும் பெற்றார். மேலும், புதிய திரைப்படக் கலைஞர்களை உருவாக்கும் நோக்கில் பயிற்சி மையம் நடத்தி, பல இளம் இயக்குநர்களை உருவாக்கியவர். அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக சென்னை ராவணன் குடிலில் வைக்கப்பட்டுள்ளது.
