மலையாளத்தில் மோகன்லாலை வைத்து பல ராணுவப் பின்னணிப் படங்களை இயக்கிய ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரியும் இயக்குநருமான மேஜர் ரவி, நீண்ட இடைவெளிக்குப் பிறகு ‘ஆபரேஷன் ராஹத்’ என்ற புதிய படத்தை இயக்குவதாக அறிவித்திருந்தார். இந்தப் படத்தில் மோகன்லாலுடன் சரத்குமாரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.
ஆனால், சமீபத்திய பேட்டியில் பேசிய மேஜர் ரவி, இந்தத் திட்டம் எதிர்பாராத விதமாக மாறியதாக தெரிவித்துள்ளார். ஆரம்பத்தில் சுமார் ரூ.30 கோடி பட்ஜெட்டில் திட்டமிடப்பட்ட படம், பின்னர் தனது அனுமதியின்றி பெரிய நட்சத்திரங்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் இணைக்கப்பட்டதால், பட்ஜெட் ரூ.230 கோடி வரை உயர்ந்ததாக அவர் கூறினார்.
குறிப்பாக, நடிகர் அக்ஷய் குமாருக்கு மட்டும் ரூ.80 கோடி சம்பளம் வழங்கும் நிலை ஏற்பட்டதாகவும், 30 கோடி திட்டம் 230 கோடி அளவுக்கு உயர்ந்தது நடைமுறைக்கு சாத்தியமற்றது என்பதால், அந்தப் படத்திலிருந்து விலகிக் கொண்டதாகவும் மேஜர் ரவி விளக்கமளித்துள்ளார். இதனால், மோகன்லால் – மேஜர் ரவி கூட்டணியில் மீண்டும் ஒரு ராணுவப் படம் வெளியாகும் என்ற ரசிகர்களின் எதிர்பார்ப்பு தற்போது ஏமாற்றமாக மாறியுள்ளது.
