நடிகை தமன்னா நடிப்பில் உருவாகியுள்ள பாலிவுட் பேண்டஸி திரைப்படமான ‘தி விவான் (The Vvaan)’ படத்தின் வெளியீட்டு தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏக்தா கபூர் தயாரித்துள்ள இந்தப் படத்தை, பிரபல ‘பஞ்சாயத்’ வெப் தொடரின் இயக்குநர் தீபக் குமார் மிஷ்ரா இயக்கியுள்ளார்.
இந்தப் படத்தில் தமன்னாவுக்கு ஜோடியாக சித்தார்த் மல்ஹோத்ரா நடித்துள்ளார். மேலும் சுனில் குரோவர், மனீஷ் பால், ஸ்வேதா திவாரி மற்றும் அனுப் சோனி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். நாட்டுப்புறக் கதைகளை மையமாகக் கொண்ட மாய எதார்த்த (Fantasy) கதைக்களத்தில் படம் உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது.
தமிழில் ‘கேடி’ திரைப்படம் மூலம் அறிமுகமான தமன்னா, தற்போது பாலிவுட்டில் பிஸியான நடிகைகளில் ஒருவராக உள்ளார். பிரம்மாண்ட படங்களில் சிறப்புப் பாடல்களுக்கு நடனமாடி கவனம் ஈர்த்து வரும் அவர், சமீபத்தில் ‘ஓ ரோமியோ’ திரைப்படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடித்திருந்தார். அதேபோல், அவரது ‘ஒடேலா 2’ திரைப்படம் கலவையான வரவேற்பைப் பெற்றது.தற்போது தமன்னா நடிப்பில் ஐந்துக்கும் மேற்பட்ட திரைப்படங்கள் வெளியீட்டுக்குத் தயாராகி வரும் நிலையில், ‘தி விவான்’ திரைப்படம் வருகிற செப்டம்பர் 25-ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
