சமீபத்தில் நடைபெற்ற விருது விழாவில் பேசிய தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் ரவி மோகன், தனது வாழ்க்கை மற்றும் சினிமா பயணம் குறித்து மனம் திறந்து பேசினார். “எனக்கு தற்போது 46 வயது. அதில் 23 ஆண்டுகள் என் வாழ்க்கையின் ஒரு பகுதியாக சினிமாவிலேயே கழிந்துள்ளது. அந்த நிலையில், நான் செய்த ஒரு சிறிய தவறு உங்களை காயப்படுத்தியிருக்கிறது. தனிப்பட்ட வாழ்க்கையும், சினிமா வாழ்க்கையும் சம அளவில் இருந்ததால், ஒரு கட்டத்தில் நான் உணர்ச்சிவசப்பட்டுவிட்டேன்” என்று கூறினார்.
அதனைத் தொடர்ந்து, “நீங்கள் கொடுத்த அன்பும், சினிமா துறையில் உள்ள அனைவரும், ‘சினிமாவை விட்டு போகிறேன் என்று மட்டும் சொல்லாதே’ என்று அறிவுரை கூறினார்கள். அந்த வார்த்தைகளை நான் வேதவாக்காக எடுத்துக்கொண்டேன். உங்கள் அனைவரின் முன்னிலையிலும் மண்டியிட்டு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். சினிமாவுக்கும், ரசிகர்களுக்கும், என்னை நேசிப்பவர்களுக்கும் நான் ஒருபோதும் துரோகம் செய்ய மாட்டேன்” என்று உருக்கமாகப் பேசினார்.
மேலும், “நான் மீண்டும் வருவேன்… திரும்பி வந்துகொண்டிருக்கிறேன். அந்த நம்பிக்கையை எனக்கு அளித்த அனைவருக்கும் நன்றி. நான் வெளிப்படையாக பேசிய பிறகு மனநலன் குறித்து பலரும் பேச ஆரம்பித்தது மகிழ்ச்சி அளிக்கிறது. இன்று நான் சிரித்துக்கொண்டு மகிழ்ச்சியாக இருப்பதற்கு காரணம் என் ரசிகர்கள்தான். நீங்கள் விரும்பிய குமரனாகவும், துருவனாகவும், தனி ஒருவனாகவும், பொன்னியின் செல்வனாகவும், ‘கராத்தே பாபு’வாகவும் நிச்சயம் மீண்டும் வருவேன். இனி தவறு நடக்காது. உங்கள் ஆசீர்வாதத்துடன் என் புதிய வாழ்க்கை தொடரும்” என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
—
