கால்பந்து கனவை சொல்ல வரும் ‘7 ஸ்டார் பாய்ஸ்’… தமிழிலும் ரிலீஸுக்கு ரெடி!

உலகக் கோப்பை கால்பந்து போட்டி களைகட்டியுள்ள நிலையில், கால்பந்து விளையாட்டை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள மலையாள திரைப்படமான ‘7 ஸ்டார் பாய்ஸ்’ விரைவில் தமிழிலும் வெளியாக உள்ளது. இதுகுறித்து இயக்குநர் நிகில் பிரேம்ராஜ் கூறுகையில், இப்படத்தில் ஆண்டனி வர்கீஸ் மற்றும் இந்திய கால்பந்தாட்ட அணியின் முன்னாள் வீரர் ஐ.எம். விஜயன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளதாக தெரிவித்தார். பயஸ் சித்திக் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு ஜேக்ஸ் பிஜாய் இசையமைத்துள்ளார். இளம் கால்பந்து வீரர்களின் கனவுகளை மையமாகக் கொண்ட உணர்வுபூர்வமான படமாக இது உருவாகியுள்ளது.

கால்பந்தாட்டத்தில் மிகுந்த ஆர்வம் கொண்ட உள்ளூர் இளைஞர்கள், உலகப் புகழ்பெற்ற கால்பந்து ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸியின் தீவிர ரசிகர்களாக உள்ளனர். இதை அறியும் ஹீரோ ஆண்டனி வர்கீஸ், அந்த இளைஞர்களை ஒன்றிணைத்து இந்திய அணியின் முன்னாள் நட்சத்திர வீரரான ஐ.எம். விஜயனிடம் அறிமுகப்படுத்துகிறார். அவர்களின் திறமையை கண்டறியும் விஜயன், அவர்களுக்கு பயிற்சியாளராகவும் வழிகாட்டியாகவும் மாறுகிறார்.

இதையடுத்து, மாநில அளவிலான கால்பந்து போட்டியில் ‘7 ஸ்டார் பாய்ஸ்’ அணி பங்கேற்று அரையிறுதி வரை முன்னேறுகிறது. இறுதிப் போட்டியில் கோப்பையை வென்றார்களா இல்லையா என்பதுதான் படத்தின் மையக்கதை. இதனுடன் கால்பந்து வீரரின் காதல் கதையும் இணைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இறுதி 25 நிமிடங்கள் முழுக்க கால்பந்து போட்டி காட்சிகள் ரசிகர்களை இருக்கை நுனியில் அமர வைக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளதாக இயக்குநர் தெரிவித்துள்ளார். மலையாளத்தில் வெளியாகும் இப்படம் விரைவில் தமிழிலும் வெளியாக உள்ளது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading