தென்னிந்திய திரையுலகின் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக திகழும் ஜூனியர் என்.டி.ஆர், கடைசியாக ‘தேவரா’ திரைப்படத்தில் நடித்திருந்தார். ஜான்வி கபூர் கதாநாயகியாக நடித்திருந்த இந்தப் படம் உலகளவில் ரூ.500 கோடிக்கும் அதிகமான வசூலைக் குவித்து மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. இந்த வெற்றியைத் தொடர்ந்து, தற்போது ‘கே.ஜி.எப்’ மற்றும் ‘சலார்’ படங்களின் இயக்குநரான பிரசாந்த் நீல் இயக்கத்தில் உருவாகி வரும் ‘டிராகன்’ திரைப்படத்தில் ஜூனியர் என்.டி.ஆர் பிஸியாக நடித்து வருகிறார்.
இந்தப் படத்தில் ஜூனியர் என்.டி.ஆருக்கு ஜோடியாக நடிகை ருக்மணி வசந்த் நடிக்கிறார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் இந்தப் படத்திற்கு ரவி பஸ்ரூர் இசையமைக்கிறார். மேலும், இந்தப் படத்திற்காக ஜூனியர் என்.டி.ஆர் வெறும் 20 நாட்களிலேயே சிக்ஸ்-பேக் தோற்றத்தை உருவாக்கியிருப்பது ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளது. பிரசாந்த் நீல் – ஜூனியர் என்.டி.ஆர் கூட்டணியில் உருவாகி வரும் ‘டிராகன்’ திரைப்படம் 2027-ஆம் ஆண்டு ஜூன் 11-ஆம் தேதி வெளியாகும் என ஏற்கனவே அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், ஜூனியர் என்.டி.ஆரின் அடுத்த புதிய திரைப்படம் குறித்த அறிவிப்பும் வெளியாகியுள்ளது. இந்தப் படத்தை இயக்குநர் திரிவிக்ரம் இயக்க, தயாரிப்பாளர் நாக வம்சி தயாரிக்கிறார். மேலும், இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கவுள்ளார். கடவுள் பின்னணியை மையமாகக் கொண்டு இந்தத் திரைப்படம் உருவாகும் என கூறப்படுகிறது. இதற்கு முன்பு ‘அரவிந்த சமேதா வீர ராகவா’ திரைப்படத்தில் இணைந்து பணியாற்றிய ஜூனியர் என்.டி.ஆர் மற்றும் திரிவிக்ரம் கூட்டணி மீண்டும் கைகோர்த்திருப்பதால், இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
இதனிடையே, ‘புஷ்பா 2’ திரைப்படத்திற்குப் பிறகு இயக்குநர் திரிவிக்ரம் இயக்கவிருந்த புதிய படத்தில் அல்லு அர்ஜுன் நடிக்கவுள்ளதாக முதலில் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், அந்தத் திட்டத்திற்கு கூடுதல் கால அவகாசம் தேவைப்படுவதாகக் கூறப்பட்டதைத் தொடர்ந்து, அல்லு அர்ஜுன் இயக்குநர் அட்லியின் புதிய படத்தில் கவனம் செலுத்தத் தொடங்கினார். இதன் காரணமாக, அல்லு அர்ஜுனுக்காக முதலில் உருவாக்கப்பட்டிருந்த அதே கதையில் தற்போது ஜூனியர் என்.டி.ஆர் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
