நடிகை சமந்தா நடிப்பில் சமீபத்தில் வெளியான தெலுங்குத் திரைப்படமான ‘மா இன்ட்டி பங்காரம்’ வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடி வருகிறது. இந்த திரைப்படம் தமிழில் ‘எங்கள் தங்கம்’ என்ற பெயரில் வெளியாகியுள்ளது. உலகம் முழுவதும் இப்படம் ரூ.80 கோடிக்கும் அதிகமான வசூலைக் குவித்துள்ளது. இந்தப் படத்தின் வெற்றி விழாவில் கலந்து கொண்ட சமந்தா, தான் தாய்மை அடைந்திருப்பதை ரசிகர்களிடம் மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டார்.
இந்த திரைப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருந்தபோதுதான் சமந்தா தாய்மை அடைந்துள்ளார். இந்த மகிழ்ச்சியான தகவலை அவர் படத்தின் இயக்குநர் நந்தினி ரெட்டியிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. தாய்மை அடைந்த பின்னரும் படத்தின் முக்கியமான நடனக் காட்சிகள் மற்றும் சண்டைக் காட்சிகளில் முழு அர்ப்பணிப்புடன் நடித்தது பலரது பாராட்டையும் பெற்றுள்ளது.
இதுகுறித்து சமீபத்தில் அளித்த பேட்டியில் இயக்குநர் நந்தினி ரெட்டி கூறியதாவது: “படத்தின் ‘தசாடியா..’ பாடல் காட்சியின் படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருந்தபோது சமந்தாவுக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்தது. அந்தப் பாடலில் இடம்பெற்ற அனைத்து நடிகர்களும் தயாராக இருந்ததால், நான்கு நாட்கள் திட்டமிடப்பட்டிருந்த படப்பிடிப்பை இரண்டு நாட்களில் முடிக்க வேண்டும் என்று கூறினர். சமந்தா முதல் நாள் மட்டுமே படப்பிடிப்பில் கலந்து கொண்டார். மறுநாள் வந்தபோது, தான் தாய்மை அடைந்திருப்பதை என்னிடம் தெரிவித்தார். அந்த செய்தி எனக்கு மிகுந்த ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் அளித்தது.
இந்த தகவலை வேறு யாரிடமும் பகிர வேண்டாம் என்று அவர் என்னிடம் கேட்டுக்கொண்டார். அதன் பிறகு, நடன இயக்குநரிடம் சமந்தாவுக்கு ரிகர்சல் தேவையில்லை, நேரடியாக டேக்கில் மட்டுமே நடனமாடினால் போதும் என்று கூறினேன். உடல்நிலையில் ஏதேனும் சிரமம் ஏற்பட்டால் உடனடியாக என்னிடம் தெரிவிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினேன். அதன் பின்னரும் கார் சேசிங் காட்சிகளைக் கூட படமாக்கினோம். அவருக்காக மாலை நேரங்களில் மட்டுமே படப்பிடிப்பை திட்டமிட்டேன். அப்போது வெயிலின் தாக்கம் குறைவாக இருக்கும். படப்பிடிப்பு நிறைவடையும் வரை அவருக்கு எந்தவிதமான கூடுதல் சிரமமும் ஏற்படாத வகையில் முழு கவனத்துடன் பார்த்துக்கொண்டேன்,” என்று தெரிவித்துள்ளார்.
—
