தென்னிந்திய சினிமாவில் பிசியான நடிகையாக மாறிய கயாடு லோஹர்… கைவசம் இத்தனை படங்களா?

‘டிராகன்’ திரைப்படம் மற்றும் ‘பவழ மல்லி’ இசை ஆல்பம் மூலம் தமிழ் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த நடிகை கயாடு லோஹர், தற்போது தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட பல மொழித் திரைப்படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். மிகக் குறுகிய காலத்திலேயே முன்னணி நடிகர்கள் மற்றும் பிரபல இயக்குநர்களின் படங்களில் தொடர்ந்து ஒப்பந்தமாகி, தென்னிந்திய திரையுலகில் வேகமாக முன்னேறி வரும் நடிகைகளில் ஒருவராக அவர் திகழ்கிறார். தற்போது அவரது நடிப்பில் அடுத்தடுத்து வெளியாகவுள்ள ஏழு முக்கிய திரைப்படங்கள் குறித்த தகவல்கள் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன.

கயாடு லோஹரின் அடுத்த வெளியீடாக, ஜூலை 10-ஆம் தேதி தமிழ் மற்றும் மலையாள மொழிகளில் ‘இதயம் முரளி’ திரைப்படம் திரைக்கு வரவுள்ளது. ஆகாஷ் பாஸ்கரன் இயக்கியுள்ள இந்தப் படத்தில் அதர்வா, ஃபஹத் பாசில், பிரீத்தி முகுந்தன் உள்ளிட்டோருடன் கயாடு லோஹரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். காலம் கடந்தாலும் மாறாத ஒருதலைக் காதலின் வலியையும் உணர்வுகளையும் மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இந்த திரைப்படம், ஒரு அழுத்தமான காதல் கதையாக உருவாகியுள்ளது. இதனைத் தொடர்ந்து, ஜூலை 23-ஆம் தேதி ஜி.வி.பிரகாஷ் குமார் நாயகனாக நடித்துள்ள ‘இம்மார்ட்டல்’ திரைப்படமும் வெளியாக உள்ளது.

மலையாளத்தில் ஆகஸ்ட் 20-ஆம் தேதி வெளியாகவுள்ள ‘ஐ அம் கேம்’ திரைப்படத்தில் கயாடு லோஹர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். நஹாஸ் ஹிதாயத் இயக்கியுள்ள இந்த அதிரடி திரைப்படத்தில் துல்கர் சல்மான் கதாநாயகனாக நடித்திருக்கிறார். மேலும் ஆண்டனி வர்கீஸ், மிஷ்கின், கதிர் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் இடம்பெற்றுள்ளனர்.

அதனைத் தொடர்ந்து, ஆகஸ்ட் 21-ஆம் தேதி அவரது தெலுங்குத் திரைப்படமான ‘தி பாரடைஸ்’ வெளியாகவுள்ளது. ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த பீரியட் டிராமா திரைப்படத்தில் நானி மற்றும் மோகன் பாபு முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள நிலையில், கயாடு லோஹர் கதாநாயகியாக நடித்துள்ளார். இதனுடன், தமிழிலும் அவர் இரண்டு முக்கிய திரைப்படங்களில் நடித்து வருகிறார். மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகும் ‘மஞ்சணத்தி’ திரைப்படத்தில் கயாடு லோஹர் மற்றும் பிரியங்கா மோகன் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். ‘வாழை’ திரைப்படத்திற்குப் பிறகு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்தப் படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்து வருகிறார்.

இதனுடன், சமீபத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள ‘சூர்யா 48’ திரைப்படத்திலும் கயாடு லோஹர் கதாநாயகியாக இணைந்துள்ளார். ‘ஜெய் பீம்’ திரைப்படத்திற்குப் பிறகு இயக்குநர் டி.ஜே.ஞானவேல் மற்றும் நடிகர் சூர்யா மீண்டும் இணையும் இந்தப் படம், ஏழைகளின் மருத்துவர் என்று அழைக்கப்படும் திருவேங்கடம் வீரராகவனின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு உருவாகவுள்ளதாகக் கூறப்படுகிறது. ஹோம்பாலே ஃபிலிம்ஸ் தயாரிக்கும் இந்த திரைப்படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைக்கிறார். இதுமட்டுமின்றி, வினய் கோவிந்த் இயக்கத்தில் நிவின் பாலி, நிகிலா விமல் ஆகியோருடன் கயாடு லோஹர் இணைந்து நடிக்கும் ‘தாரம்’ என்ற மலையாள திரைப்படத்தின் படப்பிடிப்பும் விரைவில் தொடங்கப்பட உள்ளது. இவ்வாறு தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழிகளிலும் முன்னணி நடிகர்களுடன் தொடர்ந்து நடித்து வரும் கயாடு லோஹர், தென்னிந்திய திரையுலகின் அடுத்த முன்னணி கதாநாயகியாக உருவெடுத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading