திருச்சி கிழக்கில் போட்டியிடவில்லை… விரிவான விளக்கம் கொடுத்த ராகவா லாரன்ஸ்!

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் முதல்வர் விஜய், பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரண்டு தொகுதிகளில் வெற்றி பெற்றார். பின்னர் திருச்சி கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பதவியை அவர் ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, அந்தத் தொகுதியை உள்ளடக்கிய காலியாக உள்ள இடங்களுக்கு விரைவில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான ஆரம்பகட்ட பணிகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது.

இந்த சூழலில், திருச்சி கிழக்கு இடைத்தேர்தலில் தமிழக வெற்றி கழகம் சார்பில் நடிகர் ராகவா லாரன்ஸ் போட்டியிடப் போவதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவின. இதுகுறித்து சில நாட்களுக்கு முன்பு பேசிய ராகவா லாரன்ஸ், “நான் அரசியலுக்கு வரலாமா, வேண்டாமா என்று யோசித்து வந்தேன். நீங்கள் அரசியலுக்கு வர வேண்டும் என்று கூறிய அன்புக்கு மகிழ்ச்சி. விரைவில் ஒரு நல்ல முடிவை அறிவிப்பேன்” என்று தெரிவித்திருந்தார்.இந்த நிலையில், தற்போது அவர் திருச்சி கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று தெளிவுபடுத்தியுள்ளார்.

இதுகுறித்து ராகவா லாரன்ஸ் கூறுகையில், “எனது தனிப்பட்ட ஆசைக்காக நான் அரசியலுக்கு வரமாட்டேன். மக்களுக்காக சேவை செய்யும் நோக்கத்தில்தான் அரசியலுக்கு வருவேன். திருச்சி கிழக்கு இடைத்தேர்தலில் நான் போட்டியிட மாட்டேன். அதனால் நான் அரசியலுக்கு வரமாட்டேன் என்று யாரும் நினைக்க வேண்டாம். திருச்சி கிழக்கில் மட்டுமே போட்டியிட மாட்டேன் என்று கூறியுள்ளேன்; வேறு எந்தத் தொகுதியிலும் போட்டியிட மாட்டேன் என்று சொல்லவில்லை” என்றார்.

மேலும், “பலரும் என்னை அரசியலுக்கு வருமாறு அழைத்தனர். திருச்சி கிழக்கில் நான் போட்டியிடப் போகிறேன் என்ற தகவல் வெளியானதும், ஏராளமானோர் ‘அண்ணா நீங்கள் வாருங்கள், நாங்கள் ஓட்டு போட்டு வெற்றி பெறச் செய்வோம்’ என்று உற்சாகமாக கூறினார்கள். நான் செல்லும் படப்பிடிப்பு தளங்களிலும், அலுவலகங்களிலும் கூட ‘வாங்க எம்.எல்.ஏ. சார்’ என்று அழைத்து பேசினார்கள். அந்த அன்பிற்கு அனைவருக்கும் மனமார்ந்த நன்றி. ஆனால் அரசியலில் தர்மம் மிகவும் முக்கியம். கட்சிக்காக தொடர்ந்து உழைத்தவர்களுக்கே முதலில் வாய்ப்பு வழங்கப்பட வேண்டும்” என்று தெரிவித்தார்.

அதோடு, “திருச்சி கிழக்கில் நான் நிற்க வேண்டுமா, அல்லது விஜய் சார் ஹீரோவாக இருந்த காலத்திலிருந்தே போஸ்டர் ஒட்டி கட்சிக்காக உழைத்த ஒருவர் போட்டியிட வேண்டுமா என்பதை விஜய் சார்தான் முடிவு செய்வார். யாரோ ஒருவர் விதை போட்டு, செடியை வளர்த்து, மரமாக்கி, அதில் பழம் வந்த பிறகு அந்தப் பழத்தை நான் மட்டும் பறித்து சாப்பிடுவது சரியல்ல. முதலில் கட்சியில் உறுப்பினராக இணைந்து, பல ஆண்டுகள் உழைக்க வேண்டும். அதன் பிறகு தலைமை வாய்ப்பு கொடுத்தால் அந்தப் பொறுப்பை ஏற்று மக்களுக்கு சேவை செய்வதுதான் உண்மையான தர்மம்” என்று ராகவா லாரன்ஸ் கூறியுள்ளார்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading