134 திரைப்படங்களின் பாடல்களின் மீது இளையராஜா உரிமை கோர முடியாது – டெல்லி உயர்நீதிமன்றம்!

இந்திய திரையுலகின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக திகழ்பவர் தமிழகத்தைச் சேர்ந்த இசைஞானி இளையராஜா. ஆயிரத்து ஐநூறுக்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ள அவர், இன்றளவும் பல புதிய படங்களுக்கு இசையமைத்து வருகிறார். அவரது இசையில் உருவான ஏராளமான பாடல்கள் பல்வேறு மொழிகளில் மறுஉருவாக்கம் செய்யப்பட்டுள்ளன. இதன் காரணமாக காப்புரிமை தொடர்பான பல்வேறு சட்டப் பிரச்சினைகளும் அவ்வப்போது எழுந்து வருகின்றன.

இந்த நிலையில், சரிகம நிறுவனம் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தது. அந்த மனுவில், 1976 முதல் 2001 வரை பல்வேறு தயாரிப்பாளர்களுடன் சட்டப்படி செய்யப்பட்ட ஒப்பந்தங்களின் அடிப்படையில் பல திரைப்படங்களின் இசை மற்றும் ஒலிப்பதிவு உரிமைகளை தாங்கள் பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளது. இருப்பினும், அந்தப் பாடல்களை இளையராஜா தனது சொந்தப் படைப்புகள் எனக் குறிப்பிட்டு பல்வேறு ஆன்லைன் தளங்களில் பதிவேற்றியுள்ளதாகவும், சரிகம நிறுவனத்தின் உரிமைக்குட்பட்ட பாடல்கள் மற்றும் இசையை பயன்படுத்துவதற்கு இளையராஜாவுக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்திருந்தது.

இந்த வழக்கை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்றம், சரிகம நிறுவனத்திடம் உரிமை உள்ள 134 திரைப்படங்களின் பாடல்களை இளையராஜா பயன்படுத்தவோ, அவற்றின் மீது உரிமை கோரவோ அல்லது பிறருக்கு உரிமம் வழங்கவோ கூடாது என்று இடைக்காலத் தடை உத்தரவு பிறப்பித்தது. இந்தத் தடையை ரத்து செய்யக் கோரி இளையராஜா தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், அந்தத் தடையை நீக்க உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

இதன் மூலம் ‘அன்னக்கிளி’, ’16 வயதினிலே’, ‘முள்ளும் மலரும்’, ‘ராஜ பார்வை’, ‘நெற்றிக்கண்’ உள்ளிட்ட 134 திரைப்படங்களின் பாடல்களை பயன்படுத்துவதற்கோ அல்லது அவற்றின் மீது உரிமை கோருவதற்கோ இளையராஜாவுக்கு உரிமை இல்லை என்று நீதிமன்றம் மீண்டும் தெளிவுபடுத்தியுள்ளது. இதற்கு முன்பு ‘மூடு பனி’ திரைப்படத்தில் இடம்பெற்ற ‘என் இனிய பொன் நிலாவே’ பாடல் தொடர்பான வழக்கிலும், காப்புரிமைச் சட்டத்தின் அடிப்படையில் ஒரு பாடலின் இசைக்கு மட்டுமே இசையமைப்பாளர் உரிமை கோர முடியும்; முழுப் பாடலுக்கும் உரிமை கோர முடியாது. பாடலின் வரிகளும், ஒலிப்பதிவும் அதில் அடங்காது என்று டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading