‘ஆஹா கல்யாணம்’ தொலைக்காட்சி தொடரில் பவி டீச்சர் கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்களிடையே பிரபலமானவர் நடிகை பிரிகிடா சாகா. அதன்பிறகு ‘மாஸ்டர்’, ‘இரவின் நிழல்’, ‘கோழிப்பண்ணை செல்லதுரை’, ‘மார்கன்’, ‘ஹாட் ஸ்பாட் 2 மச்’ உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளார். தற்போது அவர் நடிகரும் இயக்குநருமான ஆனந்த் ராமை காதலித்து வருகிறார். ‘மீசைய முறுக்கு’ திரைப்படத்தில் நடித்த ஆனந்த் ராம், சென்னை லயோலா கல்லூரியில் விஸ்காம் படிப்பை முடித்தவர். சில படங்களில் நடித்துள்ள அவர், தற்போது புதிய திரைப்படம் ஒன்றை அமைதியாக இயக்கி வருகிறார்.
இந்த நிலையில், ஆனந்த் ராமின் பிறந்தநாளை முன்னிட்டு இருவரும் இணைந்து தங்களது காதலை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், இதுவரை தங்களுக்கு அளவற்ற அன்பும் ஆதரவும் வழங்கி வந்த குடும்பத்தினர், நண்பர்கள், திரையுலக நண்பர்கள், பத்திரிகை மற்றும் ஊடகத்துறையினர், ரசிகர்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துள்ளனர். வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் துணையாக இருந்த அனைவரும், தங்களது புதிய வாழ்க்கைப் பயணத்திற்கும் ஆசீர்வாதங்களையும் வாழ்த்துகளையும் வழங்க வேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொண்டுள்ளனர்.
ஆனந்த் ராம் – பிரிகிடா சாகா ஜோடியின் திருமணம் இந்த ஆண்டுக்குள் நடைபெற உள்ளது. திருமண தேதி மற்றும் அதற்கான பிற விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
