Advertisement

அடித்தால் திருப்பி அடிக்க வேண்டும்… பள்ளி நினைவுகளைப் பகிர்ந்த நடிகை கயாடு லோஹர்!

தென்னிந்திய திரையுலகில் கவனம் ஈர்த்து வரும் இளம் நடிகைகளில் ஒருவராக கயாடு லோஹர் திகழ்கிறார். மலையாளம், தெலுங்கு மற்றும் தமிழ் உள்ளிட்ட பல மொழித் திரைப்படங்களில் நடித்து வரும் அவர், தமிழில் பிரதீப் ரங்கநாதன் நடித்த ‘டிராகன்’ திரைப்படத்தின் மூலம் ரசிகர்களிடையே தனக்கென ஒரு இடத்தைப் பெற்றார். அதனைத் தொடர்ந்து டொவினோ தாமஸுடன் இணைந்த! நடித்த மலையாள திரைப்படமான ‘பள்ளிச்சட்டம்பி’ அவருக்கு பாராட்டுகளை பெற்றுத் தந்தது. தற்போது இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கும் புதிய திரைப்படத்திலும், நடிகர் சூர்யாவுடன் இணையும் மற்றொரு படத்திலும் அவர் நடித்து வருகிறார்.

இந்த நிலையில், அண்மையில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கயாடு லோஹர், தனது பள்ளி நாட்களில் நடந்த மறக்க முடியாத ஒரு சம்பவத்தை பகிர்ந்து கொண்டார்.

அவர் கூறுகையில், “நான் பத்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தபோது, எங்கள் வீட்டிற்கு அருகில் இருந்த டியூஷன் மையத்திற்கு தினமும் செல்வேன். அப்போது ஒரு இளைஞர் தொடர்ந்து என்னை ஈவ்டீசிங் செய்து தொந்தரவு செய்தார். முதல் முறை அதை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. இரண்டாவது முறையும் அமைதியாக இருந்தேன். ஆனால் மூன்றாவது முறையும் அவர் எல்லை மீறி நடந்துகொண்டபோது எனக்கு கடும் கோபம் வந்தது. அருகில் கிடந்த பெரிய கல்லை எடுத்து அவரது தலையில் வீசினேன். அதனால் அவருக்கு தலையில் காயம் ஏற்பட்டு ரத்தம் வழிந்தது. அதன் பிறகு அங்கிருந்து உடனே நான் வெளியேறிவிட்டேன்” என்று தெரிவித்தார்.

மேலும், “என்னைப் பார்த்தால் மிகவும் அமைதியான பெண் என்று பலர் நினைப்பார்கள். ஆனால் யாராவது தவறு செய்தால் அதை அமைதியாக ஏற்றுக்கொள்ளக் கூடாது. அதற்கு எதிராக துணிச்சலாக நிற்க வேண்டும். தேவைப்பட்டால் திருப்பி எதிர்க்கவும் வேண்டும்” என்று கயாடு லோஹர் தெரிவித்துள்ளார்.

Add a Comment

Leave a Reply