கமல் எனக்கு செய்த உதவியையும் அளித்த ஊக்கத்தையும் வார்த்தைகளால் விவரிக்க முடியாது – ரஜினிகாந்த் நெகிழ்ச்சி!

நடிகர் கமல்ஹாசனின் ராஜ்கமல் நிறுவனம் தயாரிக்கும், நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் அவரது 173வது திரைப்படத்தின் அறிவிப்பு சென்னையில் நடைபெற்றது. இந்த திரைப்படத்திற்கு ‘தர்மன்’ என பெயரிடப்பட்டுள்ளது. அஷ்வத் மாரிமுத்து இயக்கும் இந்த படத்தில் சிம்ரன் மற்றும் ராஷி கண்ணா முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். அனிருத் இசையமைக்கிறார். படத்தின் தொடக்க விழாவில் பேசிய ரஜினிகாந்த், ‛‛நான் பேசினாலே ஒரு பிரச்சினைதான். அது எனக்கும் பிரச்சினை, உங்களுக்கும் பிரச்சினை. பேசாமல் இருந்தால், இவர் வாயில் கொழுக்கட்டை இருக்கிறதா என்று கேட்பார்கள். பேசினால், இதோ பேசிவிட்டார் என்று அதற்கும் ஒரு பிரச்சினையை உருவாக்குவார்கள். நீண்ட நாட்களுக்கு பிறகுதான் ஒரு விஷயம் எனக்குப் புரிந்தது. நம்மை விரும்பாதவர்களுக்கு நாம் என்ன செய்தாலும் பிடிக்காது. அதேபோல், நம்மை விரும்புபவர்களுக்கு நாம் செய்வது அனைத்தும் பிடிக்கும் என்று நினைப்பது முட்டாள்தனம்.

இந்த திரைப்படத்திற்கு அஷ்வத் நான்காவது இயக்குநர். முதலில் ரவிக்குமார் இயக்குவதாக இருந்தது. அதன் பின்னர் சுந்தர் சி, அதன்பிறகு சிபி சக்கரவர்த்தி என இயக்குநர்கள் மாறி, இறுதியாக அஷ்வத் மாரிமுத்து இந்த படத்தை இயக்குகிறார். சிபி கூறிய கதை எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அது மிகவும் சென்சிட்டிவான ஒரு கதை. அணு விஞ்ஞானியை மையமாகக் கொண்ட அந்த திரைப்படம் உருவாக சிறிது காலம் தேவைப்படும் என்பதால் அதை தற்காலிகமாக ஒத்திவைத்தோம்.

அந்த கதையை நான் கேட்கவில்லை, நீங்களே கேட்டு முடிவு செய்யுங்கள் என்று கமல் என்னிடம் கூறினார். இந்த திரைப்படத்தில் அனைத்து பொறுப்புகளையும் கமல் என்னிடம் ஒப்படைத்துவிட்டார். அதுவே எனக்கு சிறிது பயமாக இருந்தது. இந்த கதைகள் மட்டும் வேண்டாம் கமல், நீங்களும் கதை கேட்டு ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று நான் கூறினேன். அஷ்வத் மீது மிகப்பெரிய பொறுப்பு உள்ளது. ஆனால் அதற்காக அவரை மட்டும் குறிப்பிடவில்லை. இது ஒரு கூட்டு முயற்சி. இந்த திரைப்படம் சிறப்பாக உருவாகும் என்ற நம்பிக்கை உள்ளது. அவரது ‘டிராகன்’ திரைப்படம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அந்த படத்தில் ஒரு நல்ல கருத்தும் இருந்தது.

கமலுடனான நட்பைப் பற்றி தனியாக சொல்ல வேண்டிய அவசியமே இல்லை. 1975-களில் கமல் ஒரு மிகப்பெரிய நட்சத்திரமாக இருந்தார். அந்த காலகட்டத்தில்தான் நான் திரையுலகிற்கு வந்தேன். ‛இளமை ஊஞ்சலாடுகிறது’ திரைப்படத்தில் நான் நடித்ததற்கு முக்கிய காரணம் கமல்தான். அந்த கதாபாத்திரத்தில் முதலில் ஜெய் கணேஷ் நடிக்க வேண்டியிருந்தது. ஆனால் கமல்தான் நான் அந்த வேடத்தில் நடிக்க வேண்டும் என்று ஸ்ரீதரிடம் பேசி என்னை நடிக்க வைத்தார். அந்த திரைப்படத்தில் நான் வெளிப்படுத்திய மேனரிசங்களை முதலில் பாராட்டியவரும் கமல்தான். அவர் செய்த உதவிகளாக இருந்தாலும், அவர் அளித்த ஊக்கமாக இருந்தாலும், அவற்றை வார்த்தைகளால் விவரிக்க முடியாது” என்று ரஜினிகாந்த் பேசினார்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading