தியாகராஜன் குமாரராஜா இயக்கி வரும் புதிய திரைப்படம் ‘பாக்கெட் நாவல்’. இயக்குநர் அண்ட்ரூ லூயிஸ் எழுதிய கதையை அடிப்படையாகக் கொண்டு உருவாகும் இப்படத்தில் விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், ராஜ் பி ஷெட்டி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இளையராஜா இசையமைக்கிறார்.
படத்தில் பணியாற்றிய அனுபவம் குறித்து மாளவிகா மோகனன் தனது சமூக வலைதளப் பக்கத்தில் நீண்ட பதிவை பகிர்ந்துள்ளார். ஒரு திரைப்படம் உருவாகும் காலத்தில் படக்குழுவினருடன் தினமும் பல மணி நேரங்களை செலவிடுவதால், அவர்கள் தங்களது இன்னொரு குடும்பமாக மாறிவிடுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
விஜய் சேதுபதியுடன் பணியாற்றியதை நினைவுகூர்ந்த மாளவிகா, தனது காட்சிகளை சிறப்பாக கொண்டு வருவதற்கு அவர் தொடர்ந்து ஊக்கமளித்ததாகவும், எவ்வளவு நேரம் ஆனாலும் பொறுமையாகவும் அக்கறையுடனும் இருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கு முன்பு ‘பேட்ட’, ‘மாஸ்டர்’ ஆகிய படங்களில் இருவரும் நடித்திருந்தாலும், ஒரே திரையில் இணைந்து நடிக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை என்றும், ‘பாக்கெட் நாவல்’ அந்த நீண்ட நாள் எதிர்பார்ப்பை நிறைவேற்றியிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.மேலும் இயக்குநர் தியாகராஜன் குமாரராஜாவின் படைப்புப் பார்வையை பாராட்டியுள்ள மாளவிகா, மனிதர்களையும் உலகத்தையும் அவர் அணுகும் விதம் தனித்துவமானது என்றும், அவருடன் பணியாற்றியது தனது சிறந்த அனுபவங்களில் ஒன்று என்றும் கூறியுள்ளார். ‘பாக்கெட் நாவல்’ வெறும் திரைப்படமாக இல்லாமல் அதற்கும் மேலான ஒரு அனுபவமாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
—
