பிரித்விராஜ் நடிப்பில் அடுத்ததாக மலையாளத்தில் உருவாகியுள்ள ‘ஐ நோ படி’ திரைப்படம் ஜூலை 9ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்த திரைப்படத்தில் கதாநாயகியாக நடிகை பார்வதி நடித்துள்ளார். மம்முட்டி நடித்த ‘ரோர்ஷாக்’ திரைப்படத்தை இயக்கிய நிசாம் பஷீர் இந்த படத்தை இயக்கியுள்ளார். ஒரு நிறுவனத்தில் பணிபுரியும் சாதாரண ஊழியர், பார்க்கக் கூடாத ஒரு சம்பவத்தை எதிர்பாராத விதமாக நேரில் காண்கிறார். அதன் பின்னர் அவரது வாழ்க்கை முற்றிலும் மாறிப்போகிறது. அந்த பிரச்சினைகளுக்கு அவர்தான் காரணமா அல்லது சூழ்நிலைகளால் அதில் சிக்கிக்கொள்கிறாரா என்பதே இந்த திரைப்படத்தின் மையக் கதையாக கூறப்படுகிறது.
இந்த திரைப்படம் குறித்து சமீபத்தில் பேசிய பிரித்விராஜ், இது ஒரு குறிப்பிட்ட ஜானரைச் சேர்ந்த படம் என்று கூற முடியாது என்றார். காரணம், இந்த கதையை முதன்முறையாக கேட்டபோது ஒவ்வொரு ஐந்து நிமிடத்திற்கும் படத்தின் ஜானர் மாறிக்கொண்டே இருப்பது போன்ற உணர்வு ஏற்பட்டதாக தெரிவித்தார். இதுவரை நாம் பார்த்த பல்வேறு வகையான கதைகளில் இருந்து முற்றிலும் மாறுபட்ட விதத்தில் இந்த கதையை உருவாக்கியுள்ளனர் என்றும் கூறினார். திரைப்படத்தில் ஏராளமான ஆக்ஷன் காட்சிகள் இடம்பெற்றிருந்தாலும், இதை வெறும் ஆக்ஷன் திரைப்படமாக மட்டும் வகைப்படுத்த முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
பிரபல பிரெஞ்சு சண்டைப் பயிற்சியாளரான யானிக் பென் வடிவமைப்பில், இந்த திரைப்படத்தின் ஆக்ஷன் காட்சிகளுக்காக அதிக நேரமும் கணிசமான பட்ஜெட்டும் செலவிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
