‘கைதி’, ‘மாஸ்டர்’ திரைப்படங்கள் மூலம் வலுவான வில்லன் நடிகராக ரசிகர்களிடையே அறிமுகமானவர் அர்ஜுன் தாஸ். அதனைத் தொடர்ந்து ‘அநீதி’, ‘ரசவாதம்’ உள்ளிட்ட திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்த அவர், விரைவில் வெளியாக உள்ள ‘கான் சிட்டி’ திரைப்படத்திலும் ஹீரோவாக நடித்துள்ளார். இந்த நிலையில், பவன் கல்யாண் நடிப்பில் தெலுங்கில் உருவாகி வருவதாக கூறப்படும் ‘ஓஜி’ திரைப்படத்தின் இரண்டாம் பாகத்திலும் அர்ஜுன் தாஸ் நடிக்க உள்ளதாக சமீபத்தில் தகவல்கள் பரவலாக பேசப்பட்டு வருகின்றன.
இந்த தகவல் குறித்து அர்ஜுன் தாஸ் விளக்கம் அளிக்கையில், ‘ஓஜி 2’ திரைப்படத்தில் நான் நடிக்கிறேன் என்ற தகவல்கள் வெளியாகி வருவது குறித்து எனக்கு எதுவும் தெரியாது. ஆனால் பவன் கல்யாண் சார் அல்லது அவர் நடிக்கும் திரைப்படத்தின் தயாரிப்பு நிறுவனத்திலிருந்து எனக்கு வாய்ப்பு கிடைத்தால், அதை நான் மறுக்காமல் நிச்சயமாக ஏற்றுக்கொள்வேன். அது எந்த கதாபாத்திரமாக இருந்தாலும் நான் நடிக்கத் தயாராக இருக்கிறேன் என்று கூறியுள்ளார்.
பவன் கல்யாணை அன்புடன் ‘அன்னையா’ என்று அழைக்கும் அர்ஜுன் தாஸ், அவரிடமிருந்து எப்போது அழைப்பு வந்தாலும் உடனடியாகச் செல்வதற்கு தயாராக இருப்பதாகவும், அவர் மீது தனக்கு மிகுந்த மரியாதை இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
