மிஸ்டர் பச்சன், கிங்டம் உள்ளிட்ட திரைப்படங்கள் மூலம் தென்னிந்திய ரசிகர்களிடையே கவனம் பெற்ற நடிகை பாக்யஸ்ரீ போர்ஸ், குறுகிய காலத்திலேயே தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ளார். தற்போது கமல்ஹாசன் தயாரிப்பில், சிவகார்த்திகேயன் நடித்து வரும் சேயோன் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்துவருகிறார்.
மதுரை பின்னணியில் கருமாத்தூர் தெய்வங்களை மையமாகக் கொண்டு உருவாகும் சேயோன் திரைப்படம், ஆக்ஷன் மற்றும் நகைச்சுவை கலந்த கிராமப்புற குடும்ப பொழுதுபோக்கு படமாக உருவாகி வருகிறது. இதைத் தொடர்ந்து, தெலுங்கில் உருவாகும் லெனின் திரைப்படத்திலும் பாக்யஸ்ரீ போர்ஸ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய பாக்யஸ்ரீ போர்ஸ், “அவுரங்காபாத் என்னுடைய முதல் வீடு என்றால், ஐதராபாத் தற்போது என் இரண்டாவது வீடாக மாறிவிட்டது” என்று தெரிவித்துள்ளார். இதையடுத்து நிகழ்ச்சி தொகுப்பாளரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்தார்.
இந்தக் கருத்து சமூக வலைதளங்களில் வைரலானதைத் தொடர்ந்து, அவர் மறைமுகமாக ஒரு தெலுங்கு நடிகருடனான காதலை சுட்டிக்காட்டியிருக்கலாம் என ரசிகர்கள் பல்வேறு யூகங்களை முன்வைத்து வருகின்றனர். இருப்பினும், இதுகுறித்து பாக்யஸ்ரீ போர்ஸ் தரப்பில் எந்தவித அதிகாரப்பூர்வ விளக்கமும் வெளியாகாததால், இந்த விவகாரம் இணையத்தில் தொடர்ந்து பேசுபொருளாக மாறியுள்ளது.
