பாலிவுட் நடிகரான அமீர்கானின் தயாரிப்பு நிறுவனமான அமீர்கான் புரொடக்ஷன்ஸ், இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவின் வாழ்க்கைப் பயணத்தை மையமாகக் கொண்டு ஒரு ஆவணப்படத்தை தயாரிக்கத் திட்டமிட்டுள்ளது. இந்த ஆவணப்படத்திற்கான திரைக்கதையுடன் அமீர்கான் நேரில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை சந்தித்து விரிவாக ஆலோசனை நடத்தினார். அந்த சந்திப்பின்போது ஆவணப்படம் உருவாக்குவதற்கான அனுமதியையும், தனது வாழ்க்கைக் கதையை திரைப்பட வடிவில் பதிவு செய்யும் முயற்சிக்கும் திரௌபதி முர்மு தனது ஒப்புதலை வழங்கியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த முக்கியமான முயற்சியை தற்போது அமீர்கான் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், “இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க ஆவணப்படத்தை திரைப்பட இயக்குநரும் எழுத்தாளருமான ஸ்வாதி சக்ரவர்த்தி பட்கல் இயக்கவுள்ளார். ஒடிசா மாநிலத்தின் ஒரு சிறிய கிராமத்தில் இருந்து தனது வாழ்க்கைப் பயணத்தை தொடங்கிய திரௌபதி முர்மு, பின்னர் இந்தியாவின் முதல் பழங்குடியினத்தைச் சேர்ந்த குடியரசுத் தலைவராக உயர்ந்ததோடு, நாட்டின் உயரிய அரசியலமைப்பு பதவியை வகித்த இரண்டாவது பெண் என்ற பெருமையையும் பெற்றார். அவரது இந்த அசாதாரணமான மற்றும் ஊக்கமளிக்கும் வாழ்க்கைப் பயணத்தை முழுமையாக இந்த ஆவணப்படம் பதிவு செய்யவுள்ளது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், இந்த ஆவணப்படம் திரௌபதி முர்முவின் வாழ்க்கையில் இடம்பெற்ற முக்கியமான அத்தியாயங்களை விரிவாக வெளிப்படுத்தவுள்ளது. அவர் அரசியல் மற்றும் பொதுவாழ்க்கையில் நுழைவதற்கு முன்பாக எதிர்கொண்ட தனிப்பட்ட சோதனைகள், துயரங்கள், பல்வேறு சவால்கள் மற்றும் கடினமான பின்னடைவுகளை அவர் எவ்வாறு தன்னம்பிக்கையுடனும் உறுதியுடனும் கடந்து வந்தார் என்பதையும் இந்த ஆவணப்படம் பதிவு செய்யும். அதோடு, அவரது நீண்டகால பொதுச் சேவை அனுபவங்கள், தலைமைத்துவ பண்புகள், சவால்களை எதிர்கொள்ளும் திறன் மற்றும் உறுதியான மனநிலையை மிக நெருக்கமாக எடுத்துக்காட்டும் வகையிலும் இந்த ஆவணப்படம் உருவாக்கப்படவுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
