நாளை வெளியாகிறது ரஜினி நடிப்பில் கமல் தயாரிப்பில் உருவாகும் ‘தலைவர் 173’ படத்தின் டைட்டில்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் ‘தலைவர் 173’ திரைப்படம் குறித்து ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பு நிலவி வரும் நிலையில், அந்தப் படத்தின் தலைப்பு நாளை (ஜூன் 24) காலை 10 மணிக்கு அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. தற்போது இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் ‘ஜெயிலர் 2’ திரைப்படத்தின் பணிகளை நிறைவு செய்துள்ள ரஜினிகாந்த், அடுத்ததாக தனது 173-வது திரைப்படத்தில் நடிக்கத் தயாராகி வருகிறார். ஆரம்பத்தில் ‘தலைவர் 173’ என தற்காலிகமாக அழைக்கப்பட்ட இந்தப் படத்தை இயக்குநர் சிபி சக்கரவர்த்தி இயக்குவார் என தகவல்கள் வெளியாகியிருந்தன. ஆனால் தற்போது ‘டிராகன்’ திரைப்படத்தை இயக்கிய அஸ்வத் மாரிமுத்து இந்தப் படத்தை இயக்க உள்ளதாக புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.

நட்சத்திர பட்டாளத்துடன் உருவாகி வரும் இந்தப் படத்தை நடிகர் கமல்ஹாசன் தனது ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் தயாரித்து வருகிறார். மேலும், மலையாள நடிகர் பாசில் ஜோசப் இந்தப் படத்தில் ரஜினிகாந்தின் மகனாக நடிக்க உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதோடு, ரஜினிகாந்தை மையமாகக் கொண்ட சிறப்பு அதிரடி பாடல் காட்சியுடன் படப்பிடிப்பை தொடங்க படக்குழு திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால் இந்தத் திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இந்த நிலையில், ‘தலைவர் 173’ திரைப்படத்தின் தலைப்பு நாளை (ஜூன் 24) காலை 10 மணிக்கு வெளியிடப்பட உள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. படத்தின் அறிவிப்பு போஸ்டரில் மருத்துவர்கள் பயன்படுத்தும் அறுவை சிகிச்சை கத்தி இடம்பெற்றுள்ளது. இதற்கு முன்பு, இந்தப் படத்தில் ரஜினிகாந்த் சென்னையில் மிகவும் பிரபலமாக இருந்த 5 ரூபாய் டாக்டர் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியானது குறிப்பிடத்தக்கது. இதனால் இந்தப் படம் எந்த வகையான கதைக்களத்தை கொண்டிருக்கும் என்ற ஆர்வம் ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading