தமிழக முதலமைச்சரான விஜய் நேற்று தனது 52வது பிறந்த நாளை சிறப்பாகக் கொண்டாடினார். அவரது பிறந்த நாளை முன்னிட்டு தமிழகம் முழுவதும் தவெக. நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பல்வேறு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து உற்சாகமாகக் கொண்டாடினர். அதுமட்டுமின்றி, மாநிலத்தின் பல்வேறு கோவில்களிலும் விஜயின் நலன் மற்றும் நீண்ட ஆயுளுக்காக சிறப்பு பூஜைகள், அபிஷேகங்கள் மற்றும் பிரார்த்தனைகள் நடத்தப்பட்டன. இந்த சூழ்நிலையில், விஜயின் தந்தையும் பிரபல இயக்குநருமான எஸ்.ஏ. சந்திரசேகர் ஊடகங்களை சந்தித்து பல்வேறு கருத்துகளை பகிர்ந்து கொண்டார்.
அப்போது பேசிய அவர், “ஒரு தந்தையாக தனது மகன் இன்று தமிழகத்தின் முதலமைச்சராக உயர்ந்து நிற்பதைப் பார்க்கும் போது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. தனக்காக மட்டும் வாழ்வதை விட பிறருக்காகவும், இந்த நாட்டின் மக்களுக்காகவும் வாழ்வதே உண்மையான வாழ்க்கை. தற்போது அந்த உயர்ந்த நோக்கத்துடன்தான் விஜய் செயல்பட்டு வருகிறார்” என்று தெரிவித்தார்.
மேலும் அவரிடம், “விஜய் அரசியல் மேடைகளில் அதிகமாக பேசுவதில்லை அல்லவா?” என்று கேள்வி எழுப்பப்பட்டபோது, அதற்கு பதிலளித்த எஸ்.ஏ. சந்திரசேகரன், “தமிழகத்தில் கடந்த 60 ஆண்டுகளாக பலர் தொடர்ந்து பேசியே வந்துள்ளனர். ஆனால் வெறும் பேச்சுகள் மட்டுமே மக்களுக்கு நன்மை செய்ததா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. அதே வழியில் விஜயும் செல்ல வேண்டிய அவசியம் என்ன? முக்கியமானது பேச்சுகளா அல்லது மக்களின் தேவைகளை நிறைவேற்றுவதா? பலர் இதை செய்வோம், அதைக் செய்வோம் என்று கூறிவிட்டு நடைமுறையில் எதையும் செய்யாமல் மக்களை ஏமாற்றியுள்ளனர். அதற்கு பதிலாக தேவையற்ற பேச்சுகளைத் தவிர்த்து, சொன்னதை செய்து காட்டுவதே ஒரு நல்ல தலைவரின் அடையாளமாகும். தற்போது விஜய் அதைத்தான் செய்து வருகிறார்” என்று கூறினார்.
அதைதொடர்ந்து, அவர் பேசுகையில், அதனால் விஜய் தேவையற்ற வகையில் அதிகமாக பேச வேண்டிய அவசியமே இல்லை. மேலும், ஆட்சிப் பொறுப்பை ஏற்ற பிறகு அனைத்து கட்சிகளையும் அரவணைத்து செல்லும் மனப்பான்மையுடன் செயல்பட்டு வருகிறார். அதிகாரப் பகிர்வை நடைமுறைப்படுத்தியுள்ளதோடு, அனைவரையும் இணைத்துக் கொண்டு நாட்டின் மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற நோக்கத்துடனும் செயல்படுகிறார். இது மிகவும் சிறந்த அரசியல் அணுகுமுறையாகும். விஜயின் செயல்பாடுகள் மூலம் இந்த நாட்டின் மக்களுக்கு மிகப்பெரிய நன்மைகள் கிடைக்கும். மக்கள் அவருக்கு வழங்கிய வாய்ப்பை அவர் சரியான முறையில் பயன்படுத்திக் கொள்வார் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது என்று எஸ்.ஏ.சந்திரசேகரன் தெரிவித்தார்.
