இறுதிக்கட்டத்தை நோக்கி நகர்ந்த விஜய் சேதுபதி – தியாகராஜன் குமாரராஜா கூட்டணியில் உருவாகும் ‘பாக்கெட் நாவல்’ படத்தின் படப்பிடிப்பு!

தமிழ் சினிமாவில் தனித்துவமான படைப்புகளுக்காக அறியப்படும் இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா, ஆரண்ய காண்டம், சூப்பர் டீலக்ஸ், மாடர்ன் லவ் சென்னை போன்ற படைப்புகள் மூலம் தனக்கென ஒரு தனி அடையாளத்தை உருவாக்கியுள்ளார். அவரது இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்த சூப்பர் டீலக்ஸ் திரைப்படம் விமர்சகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றதுடன், அந்தப் படத்திற்காக விஜய் சேதுபதி தேசிய விருதையும் வென்றார்.

இந்த வெற்றிக் கூட்டணி தற்போது ‘பாக்கெட் நாவல்’ திரைப்படத்தின் மூலம் மீண்டும் இணைந்துள்ளது. தியாகராஜன் குமாரராஜாவின் டைலர் டர்டன் மற்றும் கினோ பிஸ்ட் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு இளையராஜா இசையமைக்கிறார். இதில் கன்னட நடிகர் ராஜ் பி. ஷெட்டி, கிஷோர் மற்றும் மாளவிகா மோகனன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

தமிழ், இந்தி, மலையாளம் உள்ளிட்ட நான்கு மொழிகளில் உருவாகி வரும் பாக்கெட் நாவல் திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இன்னும் இரண்டு வாரங்களில் முழு படப்பிடிப்பும் நிறைவடையும் என கோலிவுட் வட்டாரங்களில் தகவல் வெளியாகியுள்ளது. படப்பிடிப்பு நிறைவடைந்த பிறகு, பாக்கெட் நாவல் திரைப்படத்தின் டீசர் மற்றும் வெளியீட்டு தேதி தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், சமீபத்தில் வெளியான முதல் பார்வை போஸ்டரில் கதை மற்றும் திரைக்கதை எழுத்தாளராக ஆண்ட்ரூ லூயிஸ் பெயர் இடம்பெற்றிருந்தது. லீலை, கொலைக்காரன் திரைப்படங்கள் மற்றும் வதந்தி வெப் தொடரை இயக்கிய ஆண்ட்ரூ லூயிஸ் இந்தப் படத்தின் கதை, திரைக்கதையை எழுதியிருப்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading