‘NEEK’ கதாநாயகன் பவிஷ் நடித்துள்ள ‘லவ் ஓ லவ்’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

பவிஷ் நாராயண் கதாநாயகனாக நடித்துள்ள ‘லவ் ஓ லவ்’ திரைப்படம் வரும் ஜூலை 10ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ திரைப்படத்தின் மூலம் கவனம் பெற்ற பவிஷ் நாராயண், இந்தப் படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக நாக துர்கா கதாநாயகியாக நடித்துள்ளார். இப்படத்தை மகேஷ் ராஜேந்திரன் இயக்கியுள்ளார். இவர் இயக்குநர் லஷ்மணிடம் ‘போகன்’ மற்றும் ‘பூமி’ திரைப்படங்களில் உதவி இயக்குநராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தப் படத்தில் இயக்குநர்கள் செல்வராகவன், கே.எஸ். ரவிக்குமார், வனிதா விஜயகுமார், ரம்யா, ஆதித்யா கதிர் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மகேஷ் ராஜேந்திரன் எழுதி இயக்கியுள்ள இந்த திரைப்படத்தை ஸினிமா மீடியா நிறுவனத்தின் சார்பில் தினேஷ் ராஜ் மற்றும் கிரியேட்டிவ் என்டர்டெயினர்ஸ் நிறுவனத்தின் சார்பில் ஜி. தனஞ்ஜெயன் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர். இன்றைய இளைஞர்களின் உணர்வுகளையும், அவர்களின் காதல் அனுபவங்களையும் நவீன கோணத்தில் மனதைத் தொடும் வகையில் வெளிப்படுத்தும் காதல் கதையாக இந்த திரைப்படம் உருவாகியுள்ளது. இந்தப் படத்தின் முதல் பார்வை போஸ்டரை நடிகர் விஜய் சேதுபதி வெளியிட்டிருந்தார். தற்போது படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்துள்ள நிலையில், போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக படக்குழு தெரிவித்துள்ளது.

‘லவ் ஓ லவ்’ திரைப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. அதனைத் தொடர்ந்து, இந்தப் படத்தின் ‘பிரோக்பாய்’ என்ற வீடியோ பாடலும் வெளியிடப்பட்டது. அந்தப் பாடலை பிரதீப் பிஜே எழுதி பாடியுள்ளார். மேலும், ‘லவ் ஓ லவ்’ திரைப்படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா வரும் 26ஆம் தேதி காலை 9 மணிக்கு நடைபெறவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இந்நிலையில், ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த திரைப்படம் வரும் ஜூலை 10ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading