ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் தயாரிப்பில் விக்ரம் பிரபு நடிப்பில் யுவன் இசையில் உருவாகும் புதிய திரைப்படம்!

ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் தயாரிப்பில், புதுமுக இயக்குநர் சித்தார்த் இயக்கத்தில், விக்ரம் பிரபு நடிக்கும் புதிய திரைப்படத்தின் அறிவிப்பு சென்னை நகரில் நடைபெற்றது. இந்த திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.

இப்படம் குறித்து விக்ரம் பிரபு கூறியதாவது: இயக்குநர் சித்தார்த் முதன்முறையாக என்னிடம் கதையை கூறியபோது, அது வெறும் காட்சி விவரிப்பாக இல்லாமல், ஆடியோவுடன் இணைந்த ஒரு புதிய அனுபவமாக இருந்தது. திரையரங்கில் அமர்ந்து ஒரு திரைப்படத்தை பார்ப்பது போன்ற உணர்வை அந்த நரேஷன் எனக்கு வழங்கியது. இந்த திரைக்கதைக்காக இயக்குநர் இரண்டு ஆண்டுகள் கடுமையாக உழைத்துள்ளார். திரையரங்க அனுபவத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார் என்பதை அறிந்ததும் மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன். ஒரே மாதிரியான படங்களில் தொடர்ந்து பயணிக்காமல், புதிய விஷயங்களை ஆராய வேண்டும் என்ற விருப்பம் எனக்கு எப்போதும் உள்ளது. புதுமுக இயக்குநர்கள் புதிய சிந்தனைகளுடன் என்னை அணுகும்போது அது மேலும் உற்சாகத்தை தருகிறது என்றார்.

இயக்குநர் சித்தார்த் பேசுகையில், விக்ரம் பிரபு மற்றும் யுவன் சார் ஆகியோருடன் இணைந்து பணியாற்றுவது மிகுந்த உற்சாகத்தை அளிக்கிறது. மனித உணர்வுகளை மையமாகக் கொண்டதுடன், முழுமையான வணிக அம்சங்களும் நிறைந்த ஒரு புதுமையான கதையாக இந்த படம் உருவாகிறது. ஒரு குறிப்பிட்ட நிலப்பரப்பையும் அங்கு வாழும் மனிதர்களின் உலகத்தையும் மையமாக வைத்து இந்த கதையை வடிவமைத்துள்ளோம். இதுவரை யாரும் பார்த்திராத முற்றிலும் மாறுபட்ட ஒரு புதிய பரிமாணத்தில் விக்ரம் பிரபுவை இந்த திரைப்படத்தில் காண முடியும் என்றார்.

யுவன் சங்கர் ராஜா பேசுகையில், இந்த திரைப்படம் இசை சார்ந்த அம்சங்களுடனும், முற்றிலும் மாறுபட்ட வணிக பாணியுடனும், புதுமையான விஷுவல் லாங்குவேஜுடனும் உருவாக இருக்கிறது. இதில் முற்றிலும் புதிய ஒரு மியூசிக் ஜானரை அறிமுகப்படுத்த முயற்சி செய்து வருகிறோம். நான் துபாயில் வசித்தாலும் பெரும்பாலான நேரங்களில் சென்னையில்தான் இருக்கிறேன். என் மகள் துபாயில் படித்து வருவதால் அங்கு தங்கியுள்ளேன். பணித் தேவைகளுக்கேற்ப துபாய் மற்றும் சென்னை இடையே தொடர்ந்து பயணம் செய்து வருகிறேன். இந்த திரைப்படத்தில் நான் பாடவில்லை. ஆனால் பாடினால் நன்றாக இருக்கும் என்று நினைக்கிறேன் என்றார்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading