நடிகர் சிலம்பரசன் நடிப்பிலும், இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்திலும் உருவாகி வரும் ‘அரசன்’ திரைப்படத்தை இந்தாண்டு தீபாவளி வெளியீடாக திரையரங்குகளுக்கு கொண்டு வர தயாரிப்பு நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தற்போது படத்தின் முக்கியமான சண்டைக் காட்சிகள் தீவிரமாக படமாக்கப்பட்டு வருகின்றன. இந்தப் படத்திற்கு பிரபல ஸ்டண்ட் இயக்குனர் பீட்டர் ஹெய்ன் பணியாற்றி வருகிறார். இவர் ஏற்கனவே ‘அசுரன்’, ‘விடுதலை’ உள்ளிட்ட வெற்றிப் படங்களில் சண்டைக் காட்சிகளை வடிவமைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், சமீபத்திய நேர்காணலில் பேசிய ஸ்டண்ட் இயக்குனர் பீட்டர் ஹெய்ன், “அரசன் திரைப்படம் மிகவும் யதார்த்தமான உள்ளூர் கேங்ஸ்டர் கதையாக உருவாகி வருகிறது. அதேசமயம், அதன் உருவாக்கம் ‘வடசென்னை’ திரைப்படத்தை விடவும் பிரம்மாண்டமான அளவில் இருக்கும். குறிப்பாக கிளைமாக்ஸ் சண்டைக் காட்சியை பற்றி வெற்றிமாறன் விவரித்தபோது எனக்கு ஆச்சரியமும் மிரட்சியும் ஏற்பட்டது. அந்தக் காட்சிக்காக என்னுடைய சிறந்த உழைப்பை வழங்குவேன்” என்று தெரிவித்துள்ளார்.
