மலையாள திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான பகத் பாசில், தமிழில் ‘வேலைக்காரன்’ திரைப்படம் மூலம் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து ‘சூப்பர் டீலக்ஸ்’, ‘விக்ரம்’, ‘மாமன்னன்’, ‘வேட்டையன்’, ‘லியோ’, ‘புஷ்பா’ உள்ளிட்ட பல முக்கிய திரைப்படங்களில் நடித்துள்ளார். மலையாளத்தின் பிரபல இயக்குநரான பாசிலின் மகனான அவர், தனது தனித்துவமான நடிப்பால் ரசிகர்களின் பாராட்டுகளை பெற்று வருகிறார்.
அதேபோல், ‘பாணா காத்தாடி’, ‘பரதேசி’, ‘சண்டிவீரன்’ உள்ளிட்ட திரைப்படங்கள் மூலம் தமிழ் ரசிகர்களிடம் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்த நடிகர் அதர்வா, தற்போது ஆகாஷ் பாஸ்கரன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘இதயம் முரளி’ திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் பிரீத்தி முகுந்தன், கயாடு லோஹர், நட்டி நட்ராஜ், ரக்சன், தமன், நிஹாரிகா மற்றும் பகத் பாசில் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். டான் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார்.
‘டிராகன்’ திரைப்படத்தின் மூலம் ரசிகர்களிடையே கவனம் பெற்ற கயாடு லோஹர், தற்போது இளைஞர்களின் விருப்ப நடிகைகளில் ஒருவராக உருவெடுத்துள்ளார். மேலும், ‘பாய்ஸ்’ திரைப்படத்திற்கு பிறகு முழுநேர இசையமைப்பாளராக செயல்பட்டு வந்த தமன், ‘இதயம் முரளி’ திரைப்படத்தின் மூலம் மீண்டும் நடிகராகவும் திரும்பியுள்ளார். இசையமைப்பாளராக மட்டுமின்றி முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார்.
ஆகாஷ் பாஸ்கரன் தயாரிப்பில் வெளியான ‘பராசக்தி’, ‘இட்லி கடை’ திரைப்படங்களைத் தொடர்ந்து, தனது இயக்கத்தில் உருவாகும் ‘இதயம் முரளி’ திரைப்படத்தையும் அவரே தயாரித்துள்ளார். இந்த நிலையில், படத்தின் டப்பிங் பணிகளை நடிகர் பகத் பாசில் நிறைவு செய்துள்ளதாக படக்குழு வீடியோ வெளியிட்டு அறிவித்துள்ளது. ‘இதயம் முரளி’ திரைப்படம் வரும் ஜூலை 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
